பிரிட்டன் உடனான வர்த்தகப் பேச்சுவார்த்தை நிறுத்தப்படவில்லை: இந்திய அதிகாரிகள் பதில்
கடந்த மாதம் இந்திய தூதரகத்தைத் தாக்கிய காலிஸ்தான் தீவிரவாதக் குழுவை கண்டிக்கத் தவறியதற்காக பிரிட்டனுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தையில் இருந்து இந்தியா "விலகிவிட்டது" என்ற செய்தியை அரசு வட்டாரங்கள் இன்று(ஏப் 10) மறுத்துள்ளன. இந்த செய்திகள் "அடிப்படையற்றவை" என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இது போன்ற தகவல்களை பிரிட்டன் அரசாங்கமும் மறுத்துள்ளது. மேலும், பரஸ்பர நன்மை பயக்கும் வர்த்தக ஒப்பந்தம் நடைமுறையில் தான் இருக்கிறது என்றும் பிரிட்டன் அரசாங்கம் கூறியுள்ளது. "இங்கிலாந்து மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் ஒரு பரஸ்பர நன்மை பயக்கும் FTAவை வழங்க உறுதிபூண்டுள்ளன. கடந்த மாதம் இந்த ஒப்பந்தத்திற்கான சமீபத்திய வர்த்தக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது." என்று பிரிட்டனின் வணிகம் மற்றும் வர்த்தகத் துறையின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.
அடுத்த பேச்சுவார்த்தை ஏப்ரல் 24 முதல் நடைபெறும்
"இந்திய தூதரகத்தில் நடந்த சமீபத்திய வன்முறைச் செயல்களுக்கு வெளியுறவுச் செயலர் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் தூதரக ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பெருநகர காவல்துறையுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம்." என்றும் பிரிட்டன் சார்பாக கூறப்பட்டிருக்கிறது. இங்கிலாந்துக்கும் இந்தியாவுக்கும் இடையிலான எட்டாவது சுற்று வர்த்தகப் பேச்சுவார்த்தை மார்ச் 20 முதல் 31 வரை நடைபெற்றது. அடுத்த அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை ஏப்ரல் 24 முதல் லண்டனில் நடைபெறும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. காலிஸ்தான் பிரிவினைவாதி அம்ரித்பால் சிங்க்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து காலிஸ்தான் அனுதாபிகள் மார்ச்-19அன்று லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தில் பெரும் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தின் போது லண்டன் காவல்துறையினர் சரியாக பாதுகாப்பு கொடுக்கவில்லை என்று குற்றம்சாட்டப்பட்டது.