சிலிக்கான் வேலி வங்கி திவால்.. இந்தியாவில் ஏற்படுத்திய பின்விளைவுகள் என்ன?
அமெரிக்காவைச் சேர்ந்த முக்கியமான வங்கிகளில் ஒன்றான சிலிக்கான் வேலி வங்கி திவாலாகும் நிலைக்கு சென்றது நாம் அறிந்ததே. அது உலக அளவில் முதலீட்டாளர்கள் இடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்திய ஒரு மோசமான நிகழ்வு. இந்த நிகழ்வு இந்திய நிதிச் சந்தையில் என்ன விதமான பின்விளைவுகளை ஏற்படுத்தியிருக்கிறது? சிலிக்கான வேலி வங்கியின் மிக முக்கியமான சேவைகளில் ஒன்று தொடக்கநிலை தொழில்நுட்ப ஸ்டார்ட்அப்-களுக்கு நிதி சேவைகளை வழங்குவது. அந்த வங்கி திவாலானதன் காரணமாக வேறு மூலதனங்களைக் கண்டறிய வேண்டிய நிலைக்கு ஆளாகியிருக்கின்றன இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள். அந்நிய நாட்டு முதலீட்டாளர்களை அதிகம் சார்ந்திருக்கும் இந்திய முதலீட்டுச் சந்தையில், இந்த நிகழ்வினால் அந்நிய நாட்டு முதலீடுகள் குறைந்திருக்கின்றன.
கண்காணிப்பு வளையத்தின் கீழ் அந்நிய நாட்டு வங்கிகள்:
சிலிக்கான வங்கியின் வீழ்ச்சி இந்தியாவில் இயங்கி வரும் அந்நிய நாட்டு வங்கிகளின் மீதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால், இந்திய அரசு அந்நிய நாட்டு வங்கிகளின் மீதான மேற்பார்வையை தீவிரப்படுத்தியிருக்கிறது. இதனாலும், இந்தியாவில் அந்நிய நாட்டின் முதலீடுகள் குறைவதற்கான வாய்ப்பு இருக்கிறது. வேற்று முதலீடுகளை நாடும் இந்திய ஸ்டார்ட்அப்களுக்கு உதவும் நோக்கில், தாங்களே கூட முதலீடு செய்ய விரும்புகிறோம் எனத் தெரிவித்திருக்கிறது இந்திய அரசு. இதே போன்றதொரு நிகழ்வு இந்தியாவில் நடக்காமல் இருக்க, இந்திய வங்கித் துறையின் உறுதிதன்மையையும் சோதனை செய்ய வேண்டியதன் அவசியத்தை இந்த நிகழ்வு உணர்த்தியிருக்கிறது. மொத்தத்தில் இதுபோன்ற இன்னொரு வங்கி வீழ்ச்சியடையாமல் இருக்க, இது அனைவருக்கும் ஒரு எச்சரிக்கை மணியாக ஒலித்திருக்கிறது.