
மதுரை அரசு மருத்துவமனை - கர்ப்பிணிகள் அடுத்தடுத்து உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம்
செய்தி முன்னோட்டம்
மதுரை மாநகராட்சிக்குட்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் இருந்து பரிந்துரையின் பேரில், கர்ப்பிணிகள் பிரசவத்திற்காக அரசு மருத்துவமனைகளில் உயர் சிகிச்சைக்காக அனுப்பப்படுவது வழக்கம்.
அவ்வாறு அனுப்பப்படும் கர்ப்பிணிகள் அடிக்கடி உயிரிழப்பதாகவும், ஆரம்ப சுகாதாரநிலையங்களின் மருத்துவர்கள் சரிவர சிகிச்சையளிக்காமல் அவசரநிலையில் இங்கு அனுப்புவதால் தான் இந்த உயிரிழப்பு ஏற்படுவதாகவும் கடந்த சில நாட்களாக தொடர் புகார்கள் எழுந்துள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கிறது.
விசாரணை
மேலும் ஓர் கர்ப்பிணி உயிரிழப்பு
அதன்படி கடந்த மாதம் மதுரை அரசு மருத்துவமனையில் 2 கர்ப்பிணிகள் உயிரிழந்திருந்த நிலையில், கடந்த 29ம் தேதி வண்டியூர் பகுதியினை சேர்ந்த கர்ப்பிணி ஒருவர், குழந்தை பிறந்த சில நிமிடங்களில் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் மருத்துவ நிர்வாகம் அவருக்கு டெங்கு பாதிப்பு உள்ளதாக கேஸ் ஷீட்டில் குறிப்பிட்டுள்ளனர்.
இதுகுறித்து ஆரம்ப சுகாதாரத்துறை மருத்துவர்கள், மாநகராட்சி நகர்நல அலுவலர் வினோத்துக்கு புகாரளித்துள்ளனர் என்று கூறப்படுகிறது.
விசாரணை
மதுரைக்கு விரைந்த விசாரணை குழு
இதனைத்தொடர்ந்து, வினோத் நேரில் சென்று மருத்துவமனையில் அந்த கர்ப்பிணியின் மரணம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.
இறந்த கர்ப்பிணியின் ரத்த மாதிரிகள் எடுத்து சோதனை செய்துள்ளார். அதில், அவருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏதும் இல்லை என்பது உறுதியாகியுள்ளது.
இதுகுறித்து வினோத் மாவட்ட ஆட்சியர் சங்கீதாவிடம் கூறியுள்ளார்.
அவர் இந்த விவகாரம் குறித்து அமைச்சரிடம் கொண்டுசெல்லவே அவரது உத்தரவின் பேரில், சென்னையிலிருந்து உயர்மட்ட விசாரணைக்குழு நேற்று(அக்.,2)மதுரைக்கு விரைந்துள்ளது.
மருத்துவமனை
கேஸ் ஷீட்டில் திருத்தம் செய்துள்ள விவகாரம்
மேலும் ஆட்சியர் சங்கீதா மேற்கொண்ட தணிக்கையில் ஏற்கனவே உயிரிழந்த கர்ப்பிணிகளின் கேஸ் ஷீட்டிலும் திருத்தம் செய்தது தெரியவந்துள்ளது.
இதனிடையே உயர்மட்ட விசாரணை குழு அதிகாரிகள், ஆரம்ப சுகாதார மருத்துவர்கள், மதுரை அரசு மருத்துவமனை டீன், மாநகராட்சி நகர்நல அலுவலர் வினோத் உள்ளிட்டோரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளது என்று தெரிகிறது.
இதற்கிடையே, அரசு மருத்துவமனை சங்கத்தலைவர் செந்தில் இதுகுறித்து அறிவிப்பு ஒன்றினை அண்மையில் வெளியிட்டுள்ளார்.
போராட்டம்
பணிநீக்கம் செய்யும் வரை போராட்டம் - அரசு மருத்துவமனை சங்கத்தலைவர்
அவர் கூறியதாவது, "மாநகராட்சி நகர்நல அலுவலர் வினோத் இறந்த கர்ப்பிணியின் உடலில் இருந்து சட்டவிரோதமான முறையில் ரத்த மாதிரிகள் எடுத்துள்ளார். இது சட்டத்துக்கு புறம்பானது என்பதால் அவரை பணி நீக்கம் செய்யும்வரை நோயாளிகள் பாதிக்காதவாறு போராட்டம் மேற்கொள்ளவுள்ளோம்" என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து அவர், பிரசவத்தின் பொழுது ஒருவர் உயிரிழந்தால் அதுகுறித்து விசாரிக்க தனி குழு ஒன்று உள்ளது என்றும்,
அவருக்கு சந்தேகம் ஏற்பட்ட பட்சத்தில் அந்த தணிக்கை குழுவிடம் முறையிட்டிருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
ஆனால் வினோத் அவ்வாறு செய்யாமல் மருத்துவமனையின் பெயரினை கெடுக்கும் வகையில் செயல்பட்டுள்ளார் என்றும் கூறியுள்ளது.