கசிந்த நீட் தேர்வுத் தாளுடன், வினாத்தாள் பொருந்தியது: கைது செய்யப்பட்ட மாணவர் வாக்குமூலம்
NEET தேர்வு விவகாரத்தில் கைது செய்யப்பட்ட அனுராக் யாதவ் என்ற மாணவன், தனது மாமா கொடுத்த கசிந்த வினாத்தாள் உண்மையான தேர்வுத் தாளுடன் பொருந்தியதாக வாக்குமூலம் அளித்துள்ளார். பாட்னாவில் நீட் தேர்வை நடத்தியதில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து பீகார் காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு பிரிவிடம் மத்திய கல்வி அமைச்சகம் புதன்கிழமை அறிக்கை கேட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த விவகாரத்தில் முறைகேட்டிற்கு துணை போனதாக நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அளித்த வாக்குமூலத்தின் படி, NEET வினாத்தாள் முந்தைய நாள் கசிந்ததாக ஒப்புக்கொண்டனர். கடந்த வாரம் NEET-UG 2024 தாள் கசிவு மற்றும் 1,500 க்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டதாகக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக நடைபெற்ற மாணவர் போராட்டங்கள் நாட்டை உலுக்கின.
முறைகேட்டில் ஈடுபட்டதாக நால்வர் கைது
பீகாரில் இருந்து கைது செய்யப்பட்ட நான்கு பேரில் NEET மாணவர் அனுராக் யாதவ், டானாபூர் நகராட்சி மன்ற பொறியாளர் சிக்கந்தர் யாதவேந்து மற்றும் இரண்டு பேர் - நிதிஷ் குமார் மற்றும் அமித் ஆனந்த். தேர்வுக்கு முந்தைய நாள் வினாத்தாள் கிடைத்ததாகவும், அதை மனப்பாடம் செய்ய வைத்ததாகவும் அவர்கள் ஒப்புக்கொண்டனர். இது குறித்து அனுராக் யாதவ் கூறுகையில்,"தேர்வு முடிந்ததும், போலீசார் வந்து பிடித்து, குற்றத்தை ஒப்புக்கொண்டேன்" என்றார். குற்றம் சாட்டப்பட்ட நிதிஷ் குமார் மற்றும் அமித் ஆனந்த் ஆகியோர், எந்தவொரு போட்டித் தேர்வின் வினாத்தாளைக் கசியவிட முடியும் என்றும், நீட் தேர்வு வினாத்தாளை கசிய விடுவதற்கு ஒவ்வொரு விண்ணப்பதாரருக்கும் ₹ 30-32 லட்சம் செலவாகும் என்றும் கூறியதாக NDTV செய்தி தெரிவிக்கிறது.