பள்ளிகளில் வாசிப்பு மன்றம் அமைக்க தலைமை செயலர் கோரிக்கை கடிதம்
தமிழ்நாடு தலைமை செயலர் வெ.இறையன்பு அவர்கள் இன்றோடு(ஜூன்.,30) தனது பதவியில் இருந்து ஓய்வுபெறுகிறார். இந்நிலையில் இவர் பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் க.அறிவொளி அவர்களுக்கு கோரிக்கை கடிதம் ஒன்றினை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், இந்த தலைமுறை மாணவர்கள் மின்னணு உபகரணங்களை கொண்டு அதிகம் வாசிப்பதால் புத்தகங்களை வாசிக்கும் பழக்கமானது அவர்களுக்கு வெகுவாக குறைந்து வருகிறது. இதன் காரணமாக அவர்களுக்கு பொது அறிவு தொடர்பான தகவல்கள் அதிகம் தெரிவதில்லை. அதனால் வாசிப்பு பழக்கத்தினை மேம்படுத்தும் வகையில் ஒவ்வொரு பள்ளியிலும் வாசிப்போர் மன்றம் ஒன்றினை அமைக்க வேண்டும். அந்த மன்றத்தில் ஒவ்வொரு மாதமும் மாணவர்கள் படித்த புத்தகங்கள் குறித்து பேசவும் வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்று எழுதியுள்ளார் என்று கூறப்படுகிறது.
தமிழகத்தின் புதிய தலைமை செயலர் நியமனம்
மேலும் அதில், இது போன்ற மன்றங்கள் அமைப்பதன் மூலம் வாசிப்பு பழக்கம் மேம்படுவதுடன் மாணவர்கள் தகவல் தொடர்பிலும் சிறந்து விளங்க முடியும். சிறந்த முறையில் நூலினை மதிப்புரை செய்யும் மாணவர்களுக்கு பரிசுகளை வழங்குவதோடு, இதில் பங்கேற்கும் மாணவர்கள் அனைவருக்கும் நல்ல புத்தகங்களை வழங்கி ஊவிக்கலாம் என்றும் அவர் கோரிக்கை வைத்துள்ளார். தமிழக தலைமை செயலராக இருந்த இறையன்பு 60 வயது பூர்த்தியடைந்து இன்றோடு ஓய்வுபெறும் நிலையில், மாணவர்கள் மத்தியில் வாசிக்கும் பழக்கத்தினை அதிகரிக்க இப்படியொரு கோரிக்கையினை பள்ளிக்கல்வித்துறை இயக்குனருக்கு கடிதம் மூலம் வைத்துள்ளார். இதனிடையே தமிழகத்தின் புதிய தலைமை செயலராக சிவ்தாஸ் மீனா நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.