உத்தரகாண்ட் மீட்பு பணி: கைகளால் துளையிட தொடங்கினர் 'எலி துளை' சுரங்கத் தொழிலாளர்கள்
உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காஷி மாவட்டத்தில் உள்ள சில்க்யாரா சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களை மீட்க நேற்று மாலை கையால் கிடைமட்ட துளையிடும் பணி தொடங்கியது. அந்த பகுதியில் துளையிட்டு கொண்டிருந்த அமெரிக்க ஆஜர் இயந்திரத்தின் பிளேடுகள் உடைந்து இடிபாடுகளில் சிக்கிக்கொண்டன. இதனால் மீட்பு பணிகள் தாமதமானது. எனினும், சிக்கிக்கொண்ட பிளேடுகள் நேற்று அகற்றப்பட்டதை அடுத்து, நேற்று மாலை 7 மணியளவில் 'எலி துளை' சுரங்கம் தோண்டும் தொழிலாளர்களின் உதவியுடன் இயந்திரங்கள் இல்லாமல் கைகளால் துளையிடும் பணி தொடங்கியது. "எலி சுரங்கத் தொழிலாளர்கள்" என்பவர்கள் நிலக்கரி பிரித்தெடுக்கும் ஒரு பழமையான முறையை கையாண்டு குறுகிய துளைகளை தோண்டும் தொழிலாளர்கள் ஆவர்.
களத்தில் இறங்கினர் 24 எலி சுரங்கத் தொழிலாளர்கள்
இதற்கிடையில், சுரங்கபாதையின் உச்சியில் இருந்து தோண்டப்பட்டு வந்த செங்குத்து துளையிடலும் ஏற்கனவே 36 மீட்டருக்கு முன்னேறியுள்ளது. மேலும், உச்சியில் இருந்தும் பக்கவாட்டில் இருந்தும் கைகளால் துளையிடும் பணியும் தற்போது தொடங்கியுள்ளது. இதற்கு முன்பு நடந்து வந்த அனைத்து வகையான மீட்பு பணிகளும் தோல்வியடைந்ததை அடுத்து, கைகளால் துளையிடும் பணிக்கு அதிகாரிகள் அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். 24 எலி சுரங்கத் தொழிலாளர்கள் 24 மணிநேரமும் உழைத்து கையால் இடிபாடுகளை அகற்றுவார்கள் என்று உத்தரகாண்ட் அரசு தெரிவித்துள்ளது. மூன்று ஷிப்டுகளில் இந்த தொழிலாளர்கள் வேலை செய்ய இருக்கிறார்கள். கைகளால் துளையிடும் பணி முடிவதற்குள் சேதமடைந்த அமெரிக்க ஆஜர் இயந்திரம் பழுப்பார்க்கப்பட்டுவிட்டால், 800-மிமீ அகலமுள்ள குழாய்கள் உள்ளே செலுத்தப்பட்டு, அதன் மூலம் தொழிலாளர்கள் மீட்கப்படுவார்கள்.