தை அமாவாசை: ராமேஸ்வரத்தில் குவிந்த கூட்டம்
தை அமாவாசையை முன்னிட்டு அக்னி தீர்த்த கடலில் நீராடவும் முன்னோர்களுக்கு பூஜை செய்யவும் ஒவ்வொரு வருடமும் மக்கள் ராமேஸ்வரத்திற்கு செல்வது வழக்கம். இன்று(ஜன:21) தை அமாவாசை தமிழகம் முழுவதும் விமர்சையாக அனுசரிக்கப்படுகிறது. இதையடுத்து, நேற்றில் இருந்து ராமேஸ்வரத்தில் மக்கள் கூட்டம் அலை மோதி வருகிறது. மக்கள் எந்த தடையும் இல்லாமல் ராமநாதசுவாமியை வழிபடுவதற்கு, இன்று பகல் முழுவதும் நடை திறந்திருக்கும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், போக்குவரத்து நெரிசலை தடுக்க யாரும் பாம்பன் பாலத்தில் வாகனத்தை நிறுத்தி இடையூறு செய்ய கூடாது என்ற அறிவிப்பும் விடப்பட்டுள்ளது. அப்படி நிறுத்துபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்திருக்கிறார்
தை அமாவாசை பாதுகாப்பு பணிகள்
போக்குவரத்து நெரிசலை தடுக்க நேற்று மதியத்திலிருந்து இன்று நள்ளிரவு வரை போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. பக்தர்கள் எந்த சிரமமும் இல்லாமல் தரிசனம் செய்ய நகர் முழுவதும் 1000 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டள்ளனர். குற்ற செயல்கள் எதுவும் நடந்துவிடாமல் பார்த்துக்கொள்வதற்கு சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. தீர்த்த கிணறுகளில் நீராடுபவர்கள் எளிதாக வரிசையில் நிற்க தடுப்பு கம்பிகள் போடப்பட்டுள்ளன. இன்று காலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு ஸ்படிலிங்க பூஜைகள் நடைபெற்றன. காலை 11 மணிக்கு மேல் அக்னி தீர்த்த கடற்கரையில் ராமர் கருட வாகனத்திலும் ராமநாதசுவாமி-பர்வதவர்த்தினி அம்மாள் ரிஷப வாகனத்திலும் காட்சி அளிப்பர் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், பாதுகாப்பு பணிகளுக்கும் போக்குவரத்து மாற்றங்களுக்கும் ஒத்துழைப்பு தருமாறு பக்தர்களிடம் கேட்டுக்கொள்ள பட்டுள்ளது.