தவறான விளம்பர வழக்கில் பொது மன்னிப்பு கேட்டார் பாபா ராம்தேவ்
செய்தி முன்னோட்டம்
பதஞ்சலி ஆயுர்வேதத்தின் தவறான விளம்பரங்கள் தொடர்பான அவமதிப்பு வழக்கை இன்று உச்ச நீதிமன்றம் விசாரித்தது.
அந்த வழக்கு தொடர்பாக பாபா ராம்தேவ் மற்றும் அவரது உதவியாளர் பால்கிருஷ்ணா ஆகியோர் இன்று உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகினர்.
பதஞ்சலி ஆயுர்வேத் என்பது யோகா குரு ராம்தேவால் இணைந்து நிறுவப்பட்ட நிறுவனமாகும். தடுப்பூசி மற்றும் நவீன மருந்துகளுக்கு எதிராக ராம்தேவ் அவதூறு பிரச்சாரம் செய்ததாக கடந்த வருடம் இந்திய மருத்துவ சங்கம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
அந்த வழக்கு தொடர்பாக கடந்த வாரம் நடந்த விசாரணையின் போது பதஞ்சலி நிறுவனர்களை நீதிமன்றம் கடுமையாக சாடியது.
ராம்தேவ் மற்றும் பால்கிருஷ்ணா ஆகியோர் கோரிய மன்னிப்பையும் ஏற்க கடந்த வாரம் உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
பதஞ்சலி
எதிர்காலத்தில் கவனமாக இருப்பேன் என்று ராம்தேவ் பதில்
ஹரித்வாரை தளமாகக் கொண்ட பதஞ்சலி நிறுவனத்திற்கு எதிராக செயல்படாததற்காக உத்தரகாண்ட் அரசாங்கத்தையும்உச்ச நீதிமன்றம் கடுமையாக சாடியது.
இன்று காலை, நீதிபதி ஹிமா கோஹ்லி மற்றும் நீதிபதி ஏ அமானுல்லா ஆகியோர் அடங்கிய அமர்வு, "யோகாவிற்கு நீங்கள் செய்ததை நாங்கள் மதிக்கிறோம்," என்று ராம்தேவ் மற்றும் பால்கிருஷ்ணா ஆகியோரிடம் கூறியது.
இந்நிலையில், பொது மன்னிப்பு வழங்க தயாராக இருப்பதாக ராம்தேவ் மற்றும் பால்கிருஷ்ணா ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
ராம்தேவ், உச்ச நீதிமன்றத்தின் மாண்பைக் குலைப்பது தனது நோக்கமல்ல என்றார்.
ராம்தேவிடம் கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றம், ஆயுர்வேதத்தின் நன்மைகளை வலியுறுத்த மற்ற மருத்துவ முறைகளை அவர்கள் ஏன் அவமதித்தார்கள் என்று கேட்டது.
அதற்கு எதிர்காலத்தில் கவனமாக இருப்பேன் என்று ராம்தேவ் பதிலளித்தார்.