ரயிலை காணவில்லை: 90 கண்டைனர்களை ஏற்றி சென்ற கூட்ஸ் ரயிலை காணவில்லை
நாக்பூர்-மும்பை கூட்ஸ் ரயில் ஒன்று 14 நாட்களுக்கு மேலாகியும் எங்கு சென்றது என்று தெரியாததால் அது தலைப்பு செய்தி ஆகி இருக்கிறது. சில நாட்களுக்கு முன் ரயில் தண்டவாளங்கள் காணாமல் போனது என்ற செய்தி வெளியாகி இருந்தது. அப்போது, அந்த தண்டவாளங்களை பீகாரை சேர்ந்த இருவர் திருடி விற்றதாக குற்றம்சாட்டப்பட்டது. அந்த வரிசையில் தற்போது காணாமல் போயிருப்பது தண்டவாளம் அல்ல. தண்டவாளத்தில் போகும் ரயிலையே காணவில்லையாம். அந்த ரயிலில் ஏற்றுமதிக்கு எடுத்து செல்லப்பட்ட பல கோடி மதிப்பிலான பொருட்கள் இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி நாக்பூரில் இருந்து கிளம்பிய அந்த ரயில், 14 நாட்கள் ஆகியும் மும்பையை சென்றடையவில்லை.
ரயிலை பற்றிய பிற விவரங்கள்
நாக்பூரில் இருந்து மும்பை செல்ல வேண்டிய ரயில்(எண்-PJD100201), பிப்ரவரி 1ஆம் தேதி மிஹான் இன்லேண்ட் கண்டைனர் டிப்போவில்(ICD) இருந்து கிளம்பியது. இது 4-5 நாட்களுக்குள் மும்பையில் உள்ள JNPTக்கு சென்றடைந்திருக்க வேண்டும். ஆனால், 14 நாட்களுக்கு மேலாகியும் அது அங்கு சென்றடையவில்லை. மேலும், அது எங்கிருக்கிறது என்ற தகவலும் கிடைக்கவில்லை. அது கடைசியாக கசரா என்ற ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள ஓம்பர்மலியில் நின்றதாக FOISஇல் பதிவாகி இருக்கிறது. FOIS என்பது ரேக்குகளின் இயக்கத்தைக் கண்காணிப்பதற்கு அமைக்கப்பட்ட கணினியாலான அமைப்பாகும். கன்டெய்னர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட்(CONCOR)இன் தலைமை மேலாளர் சந்தோஷ் குமார் சிங், நேற்று(பிப் 13) மாலை இந்த தகவலை உறுதி செய்தார்.