மாநிலங்களவையிலும் தாக்கல் செய்யப்பட்ட இந்திய தொலைத்தொடர்புச் சட்டம்
இந்திய தொலைத்தொடர்பு சேவைகள் மற்றும் அது தொடர்பான பல்வேறு நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்தும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட தொலைத்தொடர்பு மசோதாவாது முன்பு மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்று தொலைத்தொடர்பு மசோதாவானது மாநிலங்களவையிலும் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. மாநிலங்களவையில் குரல் வழி வாக்கெடுப்பு மூலம் இந்தச் மசோதா தற்போது தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. முன்பு பயன்பாட்டில் இருந்த இந்திய தந்திச் சட்டம் மற்றும் கம்பியில்லா தந்திச் சட்டம் உள்ளிட்ட சட்டங்களுக்கு மாற்றாக இந்தப் புதிய தொலைத்தொடர்பு சட்டம் உருவாக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும், OTT மற்றும் இணைய வசதியைக் கொண்டு மேற்கொள்ளப்படும் அழைப்புகள் மற்றும் சேவைகளையும் இந்தத் தொடலைத்தொடர்பு சட்டத்தின் கீழ் கொண்டி வந்திருக்கிறது மத்திய அரசு.
தொலைத்தொடர்பு சட்டம் (2023):
இதுவரை தொலைத்தொடர்பு சேவைகளை நிர்வாகிப்பது மற்றும் அது தொடர்பான விஷயங்களைக் கையாளும் உட்சபட்ச அதிகாரத்தைக் டிராய் (Telecom Regulatory Authority of India) அமைப்பே கொண்டிருந்தது. தற்போது தாக்கல் செய்யப்பட்டிருக்கும் புதிய தொலைத்தொடர்பு சட்டத்தில் டிராயின் அதிகாரங்களைக் குறைத்து, அதற்குப் பதிலாக கூடுதல் அதிகாரத்தை மத்திய அரசு பெற வழிவகை செய்யப்பட்டிருக்கிறது. எந்த ஒரு தொலைத்தொடர்பு சேவைக்கும், நுழைவுக் கட்டணம், உரிமக் கட்டணம் மற்றும் அபராதக் கட்டணம் ஆகியவற்றை நீக்கும் அதிகாரத்தைப் புதிய தொலைத்தொடர்பு சட்டத்தின் மூலம் பெறுகிறது மத்திய அரசு. இதனை சந்தைப் போட்டி, தொலைத்தொடர்பு சேவை நீட்டிப்பு, வாடிக்கையாளர் அல்லது பயனாளர் நலன் மற்றும் தேசப் பாதுகாப்பு ஆகிய காரணங்களை முன்வைத்து மத்திய அரசு மேற்கொள்ள முடியும்.