தீ விபத்து ஏற்பட்ட ராஜ்கோட் கேமிங் மண்டலத்திற்கு தீயணைப்பு துறை அனுமதி வழங்கவில்லை
குஜராத்தின் ராஜ்கோட்டில் உள்ள கேமிங் மண்டலத்தில், நேற்று ஏற்பட்ட தரும் தீ விபத்தில் 20 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இந்நிலையில், அந்த கேமிங் மண்டலம் தீயணைப்புத் துறையிடமிருந்து நோ ஆப்ஜெக்டிவ் சான்றிதழ்(என்ஓசி) பெறவில்லை என்பது தெரியவந்துள்ளது. மேலும், அந்த கேமிங் மண்டலத்தில் நுழைவு மற்றும் வெளியேறுதல் ஆகியவற்றுக்கு தேவையான இரண்டு வழிகள் வைக்கப்படவில்லை என்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த கேமிங் மண்டலத்தில் நுழைவு மற்றும் வெளியேறுதலுக்கு ஒரே ஒரு வழி மட்டுமே இருந்திருக்கிறது. கூடுதலாக, அந்த கேமிங் மண்டலத்தில் பல்வேறு பாக்கெட்டுகளில் ஆயிரக்கணக்கான லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் சேமிக்கப்பட்டிருந்தது. தீ விபத்து ஏற்படுவதற்கு இதுவும் பெரும் காரணமாக இருந்திருக்கலாம்.
மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம்
இந்த தீ விபத்தில் இதுவரை 9 குழந்தைகள் உட்பட 27 பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. அடையாளம் காண முடியாத அளவுக்கு உயிரிழந்தவர்களின் உடல்கள் கருகிவிட்டதாகவும், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது உறவினர்களின் டிஎன்ஏ மாதிரிகள் அடையாளம் காண சேகரிக்கப்பட்டுள்ளதாகவும் சிறப்பு புலனாய்வுக் குழு(எஸ்ஐடி) உறுப்பினர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த குஜராத் அரசு அமைத்த 5 பேர் கொண்ட எஸ்ஐடி 72 மணி நேரத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அந்த குழு நேற்று இரவு ராஜ்கோட்டை அடைந்து உள்ளூர் நிர்வாகத்துடன் ஒரு சந்திப்பை நடத்தியது. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என ராஜ்கோட் மாவட்ட நீதிபதி தெரிவித்தார். இருப்பினும், சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.