ராஜஸ்தானில் உள்ள முக்கிய குஜ்ஜார் பகுதிக்கு செல்கிறார் பிரதமர் மோடி
நாடு முழுவதும் உள்ள குஜ்ஜார் சமூகத்தினரால் வழிபடப்படும் கடவுளான தேவநாராயணரின் 1,111வது பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி இன்று(ஜன 28) ராஜஸ்தானின் பில்வாரா மாவட்டத்திற்கு செல்கிறார். பில்வாராவின் மலசேரி துங்ரி கிராமத்தில் நடைபெறும் மத்திய கலாச்சார அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ள இந்த நிகழ்ச்சிக்கு ராஜஸ்தான் ஆளுநர் கல்ராஜ் மிஸ்ராவும் அழைக்கப்பட்டுள்ளார். இந்த ஆண்டு இறுதியில் ராஜஸ்தானில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பிரதமர் இந்தப் பயணத்தை மேற்கொள்கிறார். ஆனால், பாரதிய ஜனதா கட்சி(பாஜக) தலைவர்கள் இந்த பயணம் அரசியல்ரீதியானது இல்லை என்று தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த ராஜஸ்தான் பயணம் அரசியல் ரீதியானது அல்ல என்று அக்கட்சி கூறினாலும், இது வரவிருக்கும் தேர்தலில் அக்கட்சிக்கு முன்னிலையை அளிக்கும் என்று பேசப்படுகிறது.
பிரதமரை வரவேற்க மலசேரி டங்ரியில் முழுவீச்சில் நடைபெற்று வரும் ஏற்பாடுகள்
பாஜக தேசிய பொதுச் செயலாளரும், ராஜஸ்தான் மாநில தலைவருமான அருண் சிங் கூறுகையில், மோடியை வரவேற்க மலசேரி டங்ரியில் ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. "தேவநாராயணரின் 1111வது நிகழ்ச்சிக்கு வரும் பிரதமரின் இந்த மதப் பயணம் பிரமாண்டமாகவும், தெய்வீகமாகவும், வரலாற்றுச் சிறப்புமிக்கதாகவும் இருக்கும்" என்று சிங் கூறியுள்ளார். பில்வாராவின் அசிந்த் சப்-டிவிஷனில் உள்ள புகழ்பெற்ற தேவநாராயணன் துங்ரி கோவிலில் மோடி பிரார்த்தனை செய்வார். அதன்பின், ஒரு கூட்டத்தில் உரையாற்றுவார் என்று PTI தெரிவித்திருக்கிறது. கடந்த நான்கு மாதங்களில் ராஜஸ்தானுக்கு பிரதமர் செல்வது இது மூன்றாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.