நோய்வாய்ப்பட்ட மனைவியைக் கவனித்துக்கொள்வதற்காக விருப்ப ஓய்வு பெற்ற கணவர்; ரிட்டைர்மென்ட் பார்ட்டியில் நடந்த துயரம்
நோய்வாய்ப்பட்ட தனது மனைவியைக் கவனித்துக் கொள்ள வேண்டும் என கணவர் விருப்ப ஓய்வு பெற, அந்த ஃபேர்வெல் விழாவின் போதே மனைவி இறந்த துயர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தானின் கோட்டாவில் உள்ள ஒரு கிடங்கில் மேலாளராகப் பணிபுரிந்த தேவேந்திர சண்டால் என்ற நபர், உடல்நிலை சரியில்லாத அவரது மனைவி தீபிகாவை கவனித்து கொள்ளவும், கூடுதல் நேரம் செலவழிக்கும் வகையில் விருப்ப ஓய்வு பெற்றார். அவருக்கு பிரியாவிடை தரும் வகையில், கடந்த டிசம்பர் 24ஆம் தேதி, தேவேந்திரனின் அலுவலக சகாக்கள் அவருக்கு விருந்து ஏற்பாடு செய்தனர். அப்போதுதான் இந்த துயர சம்பவம் நடந்துள்ளது.
சோகத்தில் முடிந்த ரிட்டைர்மென்ட் பார்ட்டி
கணவர் தேவேந்திரனின் பிரியாவிடை விழாவில், அவரது மனைவி தீபிகாவும் கலந்துகொண்டார். சக ஊழியர்கள் தம்பதியருக்கு பூங்கொத்துகளை வழங்கி, மாலை அணிவித்து கொண்டாடினர். தீபிகாவும் அவர்களுடன் சிரித்துக் கொண்டிருந்த நிலையில் திடீரென உடல்நிலை மோசமடைந்தது. திடீரென அவர் நாற்காலியில் இருந்து சரிந்து விழா, பதறிய கணவரும், சக ஊழியர்களும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.