கோவையில் துப்பாக்கி குண்டுகளுடன் சிக்கிய ராஜஸ்தான் நபர் கைது
கோவை விமான நிலையத்தில் நேற்று(ஜூலை.,22) மதியம் டெல்லிக்கு செல்ல விமானம் ஒன்று தயார் நிலையில் இருந்தது. அதில் பயணிப்பதற்காக வருகை தந்திருந்த பயணிகள் மற்றும் அவரது உடமைகளை அங்கிருந்த ஊழியர்கள் சோதனை செய்து கொண்டிருந்துள்ளனர். அப்போது 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவரது கைப்பையில் 2 துப்பாக்கி குண்டுகள் இருப்பது தெரியவந்தது. இதனை கண்ட விமானநிலைய ஊழியர்கள் அதிர்ச்சியடைந்த நிலையில், அந்த நபரிடம் இது குறித்து விசாரணை செய்துள்ளனர். ஆனால் அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளார். அதனால் பீளமேடு காவல்நிலையத்திற்கு இதுகுறித்து தகவல் அளிக்கப்பட்டது. உடனே போலீசாரும் விரைந்து அங்கு சென்று, அந்த நபரிடம் இருந்த குண்டுகளையும், அவரது பையையும் பறிமுதல் செய்தனர்.
விமான நிலையத்தில் பதிவாகிய சிசிடிவி பதிவுகள் ஆய்வு
இதனைத்தொடர்ந்து அந்த நபரை கைது செய்த போலீசார், அவரிடம் தீவிர விசாரணையினை மேற்கொண்டனர். அப்போது, அவர் ராஜஸ்தானை சேர்ந்த ஷியாம் சிங் என்றும், அவர் காண்ட்ராக்ட் மற்றும் விவசாயப்பணிகளை செய்து வருவதும் தெரியவந்தது. தொடர்ந்து, அவர் திருப்பூரிலுள்ள தனது சகோதரனை காணவே இங்கு வந்ததாகவும், அவரை பார்த்துவிட்டு மீண்டும் ராஜஸ்தான் திரும்பவே விமான நிலையத்திற்கு வந்ததாகவும் கூறினார். "அப்படியெனில் உங்கள் பையில் துப்பாக்கி குண்டுகள் எப்படி வந்தது?"என்று போலீசார் கேள்வியெழுப்பியதற்கு, அந்த குண்டுகள் தனது பையில் எவ்வாறு வந்தது என்பது நிஜமாகவே தெரியாது என்று கூறியுள்ளார். இந்நிலையில் தற்போது இவர் கூறுவது உண்மையா?பொய்யா?என்பதனை கண்டறியும் நோக்கில் விசாரணை மேற்கொண்டு வரும் காவல்துறை விமான நிலையத்தில் பதிவாகிய சிசிடிவி பதிவுகளையும் ஆய்வு செய்து வருகிறார்கள்.