ராஜஸ்தான் முதல்வர் கெலாட் இன்று ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்
ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்ததால், முதல்வர் அசோக் கெலாட் இன்று ராஜினாமா செய்யவுள்ளார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநர் கல்ராஜ் மிஸ்ராவிடம் இன்று இரவுக்குள் சமர்பிப்பார் என்று கூறப்படுகிறது. 25 நவம்பர் 2023 அன்று ராஜஸ்தானில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. அதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. அதன்படி, ராஜஸ்தானில் பாரதிய ஜனதா கட்சி 18 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 97 இடங்களில் முன்னிலையில் உள்ளது. அதே நேரம், காங்கிரஸ் 5 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 64 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.
அடுத்த முதல்வர் யார்?
இன்று பிற்பகல் 3:30 மணி நிலவரப்படி, பாஜக 18 இடங்களில் வெற்றி பெற்று 97 இடங்களில் முன்னிலை வகித்தது. இதில் வெற்றி பெற்றவர்களில் முன்னாள் முதல்வரும், பாஜக பிரமுகருமான வசுந்தரா ராஜேவும் ஒருவர் ஆவார். கடந்த 20 ஆண்டுகளாக ராஜஸ்தான் பாஜகவின் முக்கிய தலைவராக வசுந்தரா ராஜே இருந்து வருவதால், இவர் தான் ராஜஸ்தானின் அடுத்த முதல்வர் என்று பேசப்படுகிறது. ராஜ்சமந்த் எம்பி தியா குமாரி, மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ், மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் மற்றும் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ஆகியோரும் முதல்வர் பதவிக்கு தகுதியான வேட்பாளர்களாக கருதப்படுகிறார்கள்.