சென்னையில் சாலையில் தேங்கிய மழைநீர் - போக்குவரத்து பாதிப்பு
செய்தி முன்னோட்டம்
தமிழ்நாடு மாநிலத்தில் கத்திரி வெயில் நிறைவுற்ற நிலையிலும் வெப்பம் தணியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர்.
இந்நிலையில் ஜூன் 18ம் தேதி தமிழகத்தில் பெய்யக்கூடும் என்று வானிலை அறிக்கை முன்னதாக தெரிவித்திருந்தது.
அதன்படி நேற்று(ஜூன்.,18) முதல் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வந்த நிலையில், சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் நள்ளிரவு முதல் கனமழை விடாமல் பெய்து வருகிறது.
இதனிடையே, தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ள காரணத்தினால் அடுத்த 48 மணி நேரத்திற்கு இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அண்மையில் அறிவித்துள்ளது.
இதனையடுத்து மழை தொடர்ந்து பெய்து வருவதால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று(ஜூன்.,19)விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மழை
சென்னையின் முக்கிய சாலைகளில் தேங்கிய மழைநீர்
சென்னையில் கிண்டி, மாம்பலம், சைதாப்பேட்டை, எழும்பூர், சேத்துப்பட்டு, நுங்கம்பாக்கம், வேளச்சேரி, ஈக்காட்டுத்தாங்கல், மீனம்பாக்கம், குரோம்பேட்டை, போன்ற பல்வேறு இடங்களில் பலத்த சூறைக்காற்றுடன் நள்ளிரவு முதல் கனமழை பெய்து வருகிறது.
இதனால் சாலைகளில் மழை நீர் அதிகளவு தேங்கியுள்ளது என்று செய்திகள் தெரிவிக்கிறது.
கத்திப்பாரா மேம்பாலத்தின் கீழ்சுரங்கபாதையில் மழைநீர் தேங்கியுள்ளது.
வேப்பேரி சாலையின் இருபுறமும் மழைநீர் தேங்கியுள்ளது.
தாம்பரம் சுரங்க பாலங்களில் போக்குவரத்து பாதிப்புகளை தவிர்க்க அதிகாலை 2.30 மணிமுதல் ஊழியர்கள் பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது.
அண்ணாசாலையில் உள்ள தேங்கிய மழைநீரை அகற்றும் பணியும் தீவிரமாக நடக்கிறது.
சென்னையின் முக்கிய சாலைகளில் இது போன்று மழைநீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.