இந்தியா முழுவதும் காலிஸ்தான் பயங்கரவாதியாகளுடன் தொடர்புடைய 51 இடங்களில் சோதனை
கனடா நாட்டில் காலிஸ்தான் பயங்கரவாதியான ஹர்தீப்-சிங் நிஜ்ஜார் அண்மையில் படுகொலை செய்யப்பட்டது பெருமளவில் சர்ச்சையினை ஏற்படுத்தியது. இந்தியா அரசாங்கம் இவரை பயங்கரவாதியாக அறிவித்திருந்த நிலையில், இவர்மீது பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளதோடு, தேடப்படுப்படுபவர் பட்டியலிலும் இடம்பெற்றிருந்தார். இதனைத்தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன்னர் மற்றொரு காலிஸ்தான் பயங்கரவாதியான சுக்தூள் சிங் என்பவர் கனடாவின் வின்னிபிக் நகரில் இரு கும்பல்களுக்கு இடையே ஏற்பட்ட துப்பாக்கிசூட்டில் கொல்லப்பட்டார். இவர் ஹர்ஷ்தீப் தல்லா என்பவரது கூட்டாளி என்று கூறப்பட்ட நிலையில், ஹர்ஷ்தீப் தல்லாவுக்கு பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பா என்னும் பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புள்ளது தெரியவந்துள்ளது. தொடர்ந்து இவர் பஞ்சாப்'பிலுள்ள இந்துமத தலைவர்கள் மற்றும் ஆர்.எஸ்.எஸ்.தலைவர்களை இலக்காக கொண்டுச்செயல்பட்ட விவகாரத்தில் தேடப்பட்டு வருபவர் என்பதை டெல்லி காவல்துறை அண்மையில் கண்டறிந்துள்ளனர்.
நாடு முழுவதும் 6 மாநிலங்களில் சோதனை
இந்நிலையில், ஹர்ஷ்தீப் தல்லா(25)மீது 25 வழக்குகள் உள்ள நிலையில், இன்று(செப்.,27)அதிகாலை முதல் என்ஐஏ அதிகாரிகள் நாடு முழுவதும் 6 மாநிலங்களில் காலிஸ்தான் பயங்கரவாதிகள், ஆதரவாளர்கள் அவர்களோடு தொடர்புடையவர்கள் சம்பந்தப்பட்ட சந்தேகத்திற்குட்பட்ட இடங்களில் சோதனை செய்து வருகிறார்கள் என்று கூறப்படுகிறது. 3 வழக்குகளில் தொடர்புடைய ஹர்ஷ்தீப் தல்லா, பம்பிஹா, லாரன்ஸ் உள்ளிட்டோரின் தொடர்புடைய 51 இடங்களில் இந்த சோதனையானது நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, பஞ்சாப் மாநிலத்தில் 30 இடங்களிலும், ராஜஸ்தானில் 13 இடங்களிலும், ஹரியானா மாநிலத்தில் 4 இடங்களிலும், உத்தரகாண்ட்டில் 2 இடங்கள் மற்றும் டெல்லி-உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் தலா ஓர் இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது என்று தெரிகிறது. எனினும், இதுவரை இவ்விவகாரம் குறித்து என்ஐஏ அதிகாரிகள் எந்தவொரு தகவலையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.