ரயில் நிலையத்தில் சுமைதூக்கும் தொழிலாளியாக மாறிய ராகுல் காந்தி
காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி வியாழக்கிழமை (செப்டம்பர் 21) கிழக்கு டெல்லி ஆனந்த் விஹார் ரயில் நிலையத்தில் சுமைதூக்கும் தொழிலாளியாக மாறி சுமைகளை தூக்கிச் சென்றார். முன்னதாக, கடந்த மாதம் டெல்லியில் சுமைதூக்கும் தொழிலாளிகள் பலரும் முக்கிய ரயில் நிலையங்களில் போராட்டம் நடத்தினர். அப்போது ராகுல் காந்தி தங்களை சந்தித்து ஆதரவு தரவேண்டும் என சிலர் கோரிக்கை விடுத்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், வியாழக்கிழமை டெல்லி ஆனந்த் விஹார் பகுதியில் உள்ள ரயில் நிலையத்திற்கு சென்ற ராகுல் காந்தி அங்குள்ள சுமை தூக்கும் தொழிலாளிகளுடன் கலந்துரையாடினார். மேலும், தொழிலாளிகள் கொடுத்த சிவப்பு சீருடை மற்றும் பேட்ஜை அணிந்து கொண்டு அவர்களுடன் நடந்து செல்லும்போது, சிறிது தூரம் சூட்கேஸை தலையில் வைத்து சுமந்து சென்றார்.
டெல்லியில் பல்வேறு தரப்பினரை சந்தித்து பேசி வரும் ராகுல் காந்தி
டெல்லியில் சுமைதூக்கும் தொழிலாளிகளை ராகுல் காந்தி சந்தித்த புகைப்படங்களை காங்கிரஸ் கட்சி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது. அந்த பதிவில் கடந்த மாதம் அப்பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தொழிலாளிகளின் கோரிக்கைகளை ஏற்று இந்த சந்திப்பு நடந்ததாக தெரிவித்துள்ளது. முன்னதாக, டெல்லியில் அவ்வப்போது மக்களை நேரடியாக சந்தித்து வரும் ராகுல் காந்தி, கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி, டெல்லியின் மொத்த காய்கறிகள் மற்றும் பழங்கள் சந்தையில் விற்பனையாளர்களுடன் உரையாடினார். அதற்கு முன், அவர் கரோல் பாக்கில் மெக்கானிக்குகளை சந்தித்து உரையாடினார். மேலும், அங்கு அவர் இரு சக்கர வாகனம் பழுதுபார்க்கும் பணியையும் சிறிது நேரம் செய்தது குறிப்பிடத்தக்கது.