Loading...
டிரம்ப், ஜி ஜின்பிங், புதின் முத்தரப்பு சந்திப்பு: பிரதமர் மோடியை விமர்சித்த ராகுல் காந்திக்கு பாஜக பதிலடி
பிரதமர் மோடியை விமர்சித்த ராகுல் காந்திக்கு பாஜக பதிலடி

டிரம்ப், ஜி ஜின்பிங், புதின் முத்தரப்பு சந்திப்பு: பிரதமர் மோடியை விமர்சித்த ராகுல் காந்திக்கு பாஜக பதிலடி

எழுதியவர் Sekar Chinnappan
Nov 20, 2026
07:13 pm

செய்தி முன்னோட்டம்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஆகியோர் பங்கேற்ற முத்தரப்பு சந்திப்பு குறித்து ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். சீனாவின் ஷென்சென் நகரில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்த சந்திப்பில் ஐக்கிய நாடுகள் சபை சீர்திருத்தம், எண்ணெய் விநியோகம் மற்றும் அணு ஆயுத அபாயக் குறைப்பு குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த சந்திப்பின் புகைப்படத்தை எக்ஸ் தளத்தில் பகிர்ந்த ராகுல் காந்தி, காங்கிரஸ் ஆட்சியில் இருந்திருந்தால் இந்திய பிரதமரும் இந்த மேஜையில் அமர்ந்திருப்பார் எனக் குறிப்பிட்டுள்ளார். சமரசம் செய்துகொண்ட பிரதமரால் ஒருபோதும் இந்த மேஜையில் அமர முடியாது எனப் பிரதமர் மோடியை அவர் நேரடியாக சாடியுள்ளார்.

வெளியுறவுக் கொள்கை

சிகாகோ பல்கலைக்கழக உரையில் வெளியுறவுக் கொள்கை மற்றும் பாகிஸ்தான் குறித்து ராகுல் கருத்து

முன்னதாக புதன்கிழமை அமெரிக்காவின் சிகாகோ பல்கலைக்கழகத்தில் உரையாற்றிய ராகுல் காந்தி மத்திய அரசின் வெளியுறவுக் கொள்கை குறித்துப் பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தார்.

சர்வதேச விவகாரங்களில் இந்தியா தற்போது ஒரு பக்கவாட்டு வீரராக மாறிவிட்டதாகவும், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான பேச்சுவார்த்தைகளில் பாகிஸ்தான் ஈடுபடுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதேநேரம் இந்தியாவில் அப்பாவி மக்கள் கொல்லப்படுவதை ஒருபோதும் ஏற்க முடியாது எனவும் ராகுல் காந்தி திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

பயங்கரவாதத்திற்கு பாகிஸ்தான் ஆதரவளிப்பதை நிறுத்தினால் மட்டுமே அந்நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பு ஏற்படும் என்றும் அவர் கூறியிருந்தார்.

பாகிஸ்தான் ரசிகர்

ராகுல் காந்தியை 'பாகிஸ்தான் ரசிகர்' எனச் சாடிய பாஜக செய்தித் தொடர்பாளர் பிரதீப் பண்டாரி

ராகுல் காந்தியின் சிகாகோ உரை மற்றும் எக்ஸ் தளப் பதிவுக்கு பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் பிரதீப் பண்டாரி வெள்ளிக்கிழமை கடுமையான பதிலடி கொடுத்துள்ளார்.

ஒவ்வொரு சர்வதேச மேடையிலும் பாகிஸ்தானை ஒரு முன்மாதிரியாக முன்னிறுத்தி ராகுல் காந்தி ஒரு பாகிஸ்தான் ரசிகர் போல செயல்படுவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய இரு நாடுகளும் இந்தியாவின் அமைதி முயற்சிகளை அங்கீகரித்துள்ளதை ராகுல் காந்தி மறந்துவிட்டதாக பண்டாரி சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் ஹார்முஸ் ஜலசந்தி தடைகளிலிருந்து ஈரான் இந்தியாவுக்கு விலக்கு அளித்துள்ளதையும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT

பாஜக குற்றச்சாட்டு

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் ஷர்ம் எல்-ஷேக் ஒப்பந்தம் மற்றும் 26/11 தாக்குதல் குறித்து பாஜக குற்றச்சாட்டு

பாகிஸ்தான் மீதான ராகுல் காந்தியின் அணுகுமுறையை விமர்சித்த பிரதீப் பண்டாரி, முந்தைய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் முடிவுகளையும் கடுமையாகச் சாடியுள்ளார்.

பயங்கரவாத நாடான பாகிஸ்தான் மீதான அன்பால் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஷர்ம் எல்-ஷேக் ஒப்பந்தத்தில் இந்தியாவின் இறையாண்மையில் சமரசம் செய்ததாக அவர் குற்றம் சாட்டினார்.

மேலும் மும்பை 26/11 பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தாமல் காங்கிரஸ் அரசு பின்வாங்கியதாகவும் பண்டாரி விமர்சித்துள்ளார்.

இதன் மூலம் இரு கட்சிகளுக்கும் இடையே இந்திய வெளியுறவுக் கொள்கை குறித்த அரசியல் மோதல் தீவிரமடைந்துள்ளது.

ADVERTISEMENT