அவதூறு வழக்கு: ராகுல் காந்திக்கு ஏப்ரல் 13 வரை ஜாமீன் நீட்டிப்பு
மோடியின் குடும்பப்பெயர் பற்றி பேசியதற்காக தொடரப்பட்ட அவதூறு வழக்கில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு சூரத் செஷன்ஸ் நீதிமன்றம் இன்று(ஏப் 3) ஜாமீன் நீட்டிப்பு வழங்கியுள்ளது. மேலும், அவரது அடுத்த விசாரணை ஏப்ரல் 13 ஆம் தேதி நடக்கும் என்பதும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சூரத் நீதிமன்றம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு 2 வருட சிறை தண்டனை விதித்ததை அடுத்து, அவர் எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கப்பட்டார். பிரதமர் மோடியின் குடும்ப பெயரை பற்றி தவறாக பேசியது தொடர்பான வழக்கில் அவருக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டது. இந்த வழக்கில் அவருக்கு கிடைத்த ஜாமீன் தற்போது ஏப்ரல் 13ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இடைத்தேர்தலை நடத்துவதற்கு காத்திருக்கும் தேர்தல் ஆணையம்
ராகுல் காந்தி தனது மனுவில், அவதூறு வழக்கில் தன்னை குற்றவாளி என்று அறிவித்த நீதிபதியின் உத்தரவை ரத்து செய்யுமாறு கோரியிருந்தார். மேலும், இந்த வழக்கு முடிவுக்கு வரும் வரை தண்டனைக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்றும் கோரியிருந்தார். மார்ச் 23 அன்று, சூரத் நீதிமன்றம் ராகுல் காந்தியை அவதூறு வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பளித்தது. அப்போது அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டு, தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதிக்கும் வகையில் அவரது தண்டனை 30 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டது. ஆனால், இதற்கிடையில், அவர் எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கப்பட்டார். இதனால், தற்போது காலியாக உள்ள வயநாடு தொகுதிக்கு இடைத்தேர்தலை அறிவிப்பதற்காக நீதிமன்ற உத்தரவை எதிர்பார்த்து தேர்தல் ஆணையமும்(EC) காத்திருக்கிறது.