Page Loader
2 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து ராகுல் காந்தி இன்று மேல்முறையீடு
அவர் பதவியில் இருந்து தகுதி நீக்கப்பட்டதை அடுத்து ராகுல் காந்தியின் வயநாடு தொகுதி தற்போது காலியாக உள்ளது.

2 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து ராகுல் காந்தி இன்று மேல்முறையீடு

எழுதியவர் Sindhuja SM
Apr 03, 2023
11:10 am

செய்தி முன்னோட்டம்

அவதூறு வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு செய்ய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று குஜராத் நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளார். பிரதமர் நரேந்திர மோடியை அவமதிக்கும் வகையில் பேசியதற்காக, அவதூறு வழக்கில் தன்னை குற்றவாளி என அறிவித்த நீதிபதி உத்தரவை ரத்து செய்யக் கோரி, சூரத் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மனு தாக்கல் செய்ய உள்ளார். ராகுல் காந்தி, தனது மக்களவை உறுப்பினர் பதவியை மீட்டெடுக்கும் வகையில் தண்டனைக்கு இடைக்காலத் தடையும் கோருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குஜராத் நீதிமன்ற உத்தரவிற்குப் பிறகு சமீபத்தில் நாடாளுமன்ற எம்.பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட ராகுல் காந்தி, தனது சகோதரி பிரியங்கா காந்தி வத்ராவுடன் நீதிமன்றத்திற்கு செல்ல உள்ளார்.

இந்தியா

ராகுல் காந்தியுடன் நீதிமன்றத்திற்கு செல்லும் மூன்று மாநில முதல்வர்கள்

அவர்களுடன் காங்கிரஸ் ஆளும் மூன்று மாநிலங்களின் முதல்வர்களான அசோக் கெலாட், பூபேஷ் பாகேல் மற்றும் சுக்விந்தர் சிங் சுகு ஆகியோரும் நீதிமன்றத்திற்கு செல்வார்கள் என்று கூறப்படுகிறது. நீதிமன்றத்தில் ஆஜராவதற்கு முன்பு, ராகுல் காந்தி நேற்று தனது தாயார் சோனியா காந்தியை சந்தித்தார். குஜராத் நீதிமன்றம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு 2 வருட சிறை தண்டனை விதித்ததை அடுத்து, அவர் எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கப்பட்டார். பிரதமர் மோடியின் குடும்ப பெயரை பற்றி தவறாக பேசியது தொடர்பான வழக்கில் அவருக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டது. ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, அதன் பின் ஜாமீன் வழங்கப்பட்டது.