ராகுல் காந்தியின் தகுதி நீக்கம் 'காந்திய தத்துவத்திற்கு இழைத்த துரோகம்': அமெரிக்க எம்பி
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, மக்களவையில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டது, காந்திய தத்துவத்திற்கு "இழைத்த துரோகம்" என்று இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க எம்பி ரோ கண்ணா தெரிவித்திருக்கிறார். குஜராத் நீதிமன்றம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு 2 வருட சிறை தண்டனை விதித்ததை அடுத்து, அவர் எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கப்பட்டார். பிரதமர் மோடியின் குடும்ப பெயரை பற்றி தவறாக பேசியது தொடர்பான வழக்கில் அவருக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டது. சூரத் நீதிமன்றத்தின் உத்தரவு வேறு எந்த உயர் நீதிமன்றத்தாலும் ரத்து செய்யபடவில்லை என்றால், அடுத்த எட்டு ஆண்டுகளுக்கு ராகுல் காந்தியால் எந்த தேர்தலிலும் போட்டியிட முடியாது.
இந்திய ஜனநாயகத்திற்காக இந்த முடிவை மாற்ற வேண்டும்: ரோ கண்ணா
"ராகுல் காந்தியை நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றியது காந்திய தத்துவத்திற்கும் இந்திய மதிப்புகளுக்கும் இழைக்கும் துரோகமாகும். என் தாத்தா பல வருடங்கள் சிறையில் இருந்து தியாகம் செய்தது இதற்காக அல்ல. நரேந்திர மோடி அவர்களே, இந்திய ஜனநாயகத்திற்காக இந்த முடிவை மாற்ற உங்களுக்கு அதிகாரம் உள்ளது." என்று ட்விட்டரில் குறிப்பிட்டிருக்கும் அமெரிக்க எம்பி ரோ கண்ணா, பிரதமர் நரேந்திர மோடியையும் 'டேக்' செய்துள்ளார். இந்தியா மற்றும் இந்திய-அமெரிக்கர்கள் தொடர்பான காங்கிரஸின் இணைத் தலைவரான ரோ கண்ணா, இந்தப் பிரச்சினையில் பிரதமர் நரேந்திர மோடியின் தலையீட்டைக் கோரியுள்ளார்.