எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு ராகுல் காந்தி கூறிய பதில்
ராகுல் காந்தி எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டிருக்கும் நிலையில், "நான் இந்தியாவின் குரலுக்காக போராடுகிறேன்" என்று ராகுல் காந்தி ட்விட்டரில் கூறியுள்ளார். தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு பிறகு ராகுல் காந்தி பதிவிட்ட முதல் ட்விட்டர் பதிவில், "நான் இந்தியாவின் குரலுக்காக போராடுகிறேன். அதற்கு என்ன விலை கொடுக்க வேண்டும் என்றாலும் அதற்கு நான் தயாராக இருக்கிறேன்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. குஜராத் நீதிமன்றம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு 2 வருட சிறை தண்டனை விதித்ததை அடுத்து, அவர் எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கப்பட்டார் என்று மக்களவை செயலகம் இன்று(மார் 24) அறிவித்தது.
இந்த நடவடிக்கை ஜனநாயகத்திற்கு எதிரானது: காங்கிரஸ்
பிரதமர் மோடியின் குடும்ப பெயரை பற்றி தவறாக பேசியது தொடர்பான வழக்கில் அவருக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டது. ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, அதன் பின் ஜாமீன் வழங்கப்பட்டது. தற்போது, நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ராகுல் காந்தியின் தண்டனை 30 நாட்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசை எதிர்த்து கேள்வி கேட்கும் ராகுல் காந்தியின் குரலை ஒடுக்க, இது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. இந்த நடவடிக்கை ஜனநாயகத்திற்கு எதிரானது என்றும் காங்கிரஸ் கூறி இருக்கிறது.