ராகுல் காந்தி எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம்: அடுத்து என்ன நடக்கும்
குஜராத் நீதிமன்றம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு 2 வருட சிறை தண்டனை விதித்ததை அடுத்து, அவர் எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கப்பட்டார் என்று மக்களவை செயலகம் இன்று(மார் 24) அறிவித்துள்ளது. பிரதமர் மோடியின் குடும்ப பெயரை பற்றி தவறாக பேசியது தொடர்பான வழக்கில் அவருக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டது. ராகுல் காந்திக்கு தண்டனை வழங்கப்பட்டதுமே அவர் தானாக தகுதி நீக்கப்பட்டதாக கருதப்படும் என்று சில சட்ட வல்லுநர்கள் கூறினர். ஒருவேளை அவருக்கு வழங்கப்பட்ட தண்டனை திரும்பிப்பெறப்பட்டால் அவரது தகுதி நீக்கமும் திரும்பபெறப்படும் என்று இன்னும் சில சட்ட வல்லுநர்கள் கூறியுள்ளனர். ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, அதன் பின் ஜாமீன் வழங்கப்பட்டது.
அடுத்த எட்டு ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது
தற்போது, நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ராகுல் காந்தியின் தண்டனை 30 நாட்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பிரதிநிதித்துவச் சட்டம், 1951 இன் பிரிவு 8(3)இன் படி, ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு ஏதாவது ஒரு குற்றத்திற்காக குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டால், அவர் தகுதி நீக்கம் செய்யப்படுவார். சூரத் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், மக்களவை செயலகம் ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்து, அவரது தொகுதி காலியாக இருப்பதாக அறிவித்தது. அந்த தொகுதிக்கான சிறப்புத் தேர்தலை இப்போது தேர்தல் ஆணையம் அறிவிக்கலாம். சூரத் நீதிமன்றத்தின் உத்தரவு வேறு எந்த உயர் நீதிமன்றத்தாலும் ரத்து செய்யபடவில்லை என்றால், அடுத்த எட்டு ஆண்டுகளுக்கு ராகுல் காந்தியால் எந்த தேர்தலிலும் போட்டியிட முடியாது.