'மக்களால் புறக்கணிக்கப்பட்ட மோடி அரசு': மக்களவை தேர்தல் முடிவுகள் குறித்து ராகுல் காந்தி கருத்து
ரேபரேலி மற்றும் வயநாடு மக்களவைத் தொகுதிகளில் வெற்றி பெற்ற பிறகு தனது முதல் செய்தியாளர் உரையில், காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோடியும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் இந்தியாவின் நிறுவனங்களை மிரட்டுவதாகக் குற்றம் சாட்டினார். "இந்த தேர்தலில் பாஜகவுக்கு எதிராக மட்டுமல்ல, மத்திய அமைப்புகளுக்கும் எதிராக நாங்கள் போராடினோம்... "இந்த நிறுவனங்கள் அனைத்தையும் அமித் ஷா மற்றும் நரேந்திர மோடி கைப்பற்றியதாக ராகுல் காந்தி கூறினார். மேலும், தேர்தல் முடிவுகள் பிரதமர் மோடிக்கு ஒரு பெரிய செய்தி என்றும் கூறினார்.
எதிர்பார்த்த அளவு தொகுதிகளை வெல்லாத பாஜக
2024 லோக்சபா தேர்தலில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 400 இடங்களில் வெற்றி கிடைக்கும் என கருத்துக்கணிப்பு கூறிய அதே வேளையில், அக்கட்சி தனித்து 370 இடங்களை வெல்லும் எனவும் கூறப்பட்டது. இருப்பினும், இன்று வாக்கு எண்ணிக்கை தொடங்கி சில மணி நேரங்களுக்குப் பிறகு, பாஜக நிர்ணயித்த இலக்குகளை விட குறைவான இடங்களிலேயே வெற்றி பெற்றுள்ளது. பாஜகவின் கோட்டை எனக்கருதப்பட்ட உத்தர பிரதேசத்தில், காங்கிரஸ் கூட்டணி கட்சியான சமாஜ்வாடி கட்சி முன்னிலை வகித்திருப்பதும் பாஜகவுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை தந்துள்ளது.
UP மக்களுக்கு நன்றி தெரிவித்த ராகுல்
"உ.பி. மக்கள் நாட்டின் அரசியலையும், அரசியலமைப்புச் சட்டத்திற்கு ஏற்பட்டுள்ள ஆபத்தையும் புரிந்து கொண்டு, அரசியலமைப்பை பாதுகாத்தனர்" என்று உத்திரபிரதேச தேர்தல் முடிவு குறித்து ராகுல் காந்தி கருத்து தெரிவித்தார். "காங்கிரஸ் கட்சி மற்றும் இந்திய கூட்டணியை ஆதரித்ததற்காக அவர்களுக்கு நன்றி" என்று அவர் மேலும் கூறினார். வெற்றி பெற்ற 2 தொகுதிகளில் எதைத் தக்கவைப்பது என்ற கேள்விக்கு, "எந்த இடத்தைத் தக்கவைப்பது என்பதை நான் இன்னும் முடிவு செய்யவில்லை" என்று பதிலளித்தார்.
மோடி 3.0 வாய்ப்பு
NDA கூட்டணி கிட்டத்தட்ட 300 இடங்களில் முன்னிலை பெற்றிருந்தாலும், வோட்டு வித்தியாசம் குறிப்பிடத்தக்க அளவில் குறைவு. 2019இல், NDA 353 இடங்களை வென்றது. அதில் BJP தனியாக 303 இடங்களைப் பெற்றது. எதிர்க்கட்சிகளின் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி, 93 இடங்களை மட்டுமே பெற்றது. அதில் காங்கிரஸ் வெறும் 52 இடங்களை மட்டுமே பெற்றது. தேர்தல் முடிவுகளுக்கு பின்னர், எக்ஸ்-ல் கருத்து தெரிவித்த மோடி,"தொடர்ந்து மூன்றாவது முறையாக NDA மீது மக்கள் நம்பிக்கை வைத்து ஓட்டளித்துள்ளனர்! இது இந்திய வரலாற்றில் ஒரு வரலாற்று சாதனையாகும். இந்த பாசத்திற்கு நான் ஜனதா ஜனார்தனுக்கு தலைவணங்கி அவர்களுக்கு உறுதியளிக்கிறேன். கடந்த பத்தாண்டுகளில் மக்களின் தேவைகளை நாங்கள் எப்படி நிறைவேற்றினோமோ அதே போல் எங்கள் நல்ல பணி தொடருவோம்."எனக்கூறியுள்ளார்.