அமித் ஷா குறித்த அவதூறு வழக்கு: ராகுல் காந்தியை விடுவித்து சுல்தான்பூர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு
செய்தி முன்னோட்டம்
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்துகளைக் கூறியதாக தொடரப்பட்ட 2018-ஆம் ஆண்டின் குற்றவியல் அவதூறு வழக்கில் இருந்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை உத்தரப் பிரதேசத்தின் சுல்தான்பூர் எம்பி/எம்எல்ஏ சிறப்பு நீதிமன்றம் அனைத்துக் குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவித்து தீர்ப்பு வழங்கியுள்ளது. சுல்தான்பூர் கூடுதல் உரிமையியல் நீதிபதி சுபம் வர்மா முன்னிலையில் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. இதற்காக லக்னோவிலிருந்து பலத்த பாதுகாப்புடன் காரில் வருகை தந்த ராகுல் காந்தி, தீர்ப்பு வாசிக்கப்படும் போது நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி, ராகுல் காந்தி மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாததால் அவரை விடுவிப்பதாக அறிவித்தார்.
பின்னணி
2018 அவதூறு வழக்கின் பின்னணி
கடந்த 2018 கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, அப்போதைய பாஜக தேசியத் தலைவராக இருந்த அமித் ஷா குறித்துப் பேசிய ராகுல் காந்தி, அவரை அவதூறாக பேசியதாகக் கூறி சுல்தான்பூர் பாஜக மாவட்ட துணைத் தலைவர் விஜய் மிஸ்ரா வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் 2024 பிப்ரவரியில் நீதிமன்றத்தில் ஆஜராகி ராகுல் காந்தி ஜாமீன் பெற்றார்.
ராகுல் காந்தியின் குரல் மாதிரி பரிசோதனை கோரி தொடரப்பட்ட மனுக்களை உயர்நீதிமன்றம் வரை மேல்முறையீடு செய்தும் நீதிமன்றங்கள் நிராகரித்தன.
அக்டோபர் 12 அன்று அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், தற்போது வழங்கப்பட்டுள்ள இந்த விடுதலைத் தீர்ப்பை உத்தரப் பிரதேச காங்கிரஸ் கட்சியினர் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர்.