2 நாட்களில் மணிப்பூருக்குள் நுழைந்த 718 மியான்மர் நாட்டவர்கள்
ஜூலை-22 மற்றும் 23ஆம் தேதிகளில் மியான்மரை சேர்ந்த 718 பேர் சரியான ஆவணங்கள் எதுவும் இல்லாமல் இந்தியாவுக்குள் நுழைய அனுமதிக்கப்பட்டனர் என்று அசாம் ரைபிள்ஸ் எல்லை பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது. இது குறித்த விரிவான அறிக்கையை சமர்ப்பிக்கும் படி அசாம் ரைபிள்ஸிடம் மணிப்பூர் அரசாங்கம் கோரியுள்ளதாக உள்துறை அமைச்சகம் நேற்று வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. 2 மாதங்களாக மணிப்பூரில் நடந்து வரும் இனக்கலவரத்திற்கு மத்தியில், இரண்டு நாட்களில் 700 மியான்மர் நாட்டவர்கள் எவ்வாறு இந்தியாவிற்குள் நுழைந்தார்கள் என்று அசாம் ரைபிள்ஸிடம் உள்துறை அமைச்சகம் கேள்வி எழுப்பியுள்ளது. இந்தியாவுக்குள் நுழைந்த புதிய மியான்மர் நாட்டவர்களிடம் ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் இருந்ததா என்பதை அறிய வழி இல்லை என்றும் மாநில அரசு கவலை தெரிவித்துள்ளது.
அகதிகளின் பயோமெட்ரிக்ஸ் மற்றும் புகைப்படங்களை பத்திரமாக வைத்திருக்க உத்தரவு
மியான்மார் நாட்டை சேர்ந்த கம்பட்டில் நடந்து வரும் மோதல்கள் காரணமாக 718 புதிய அகதிகள் இந்திய-மியான்மர் எல்லையைத் தாண்டி ஜூலை 23ஆம் தேதி சந்தேல் மாவட்டம் வழியாக மணிப்பூருக்குள் நுழைந்ததாக 28 செக்டர் அசாம் ரைபிள்ஸ் தெரிவித்துள்ளது என்று மணிப்பூர் உள்துறை அமைச்சகம் ஒரு அறிக்கையை நேற்று வெளியிட்டது. விசா மற்றும் பயண ஆவணங்கள் இல்லாமல் மியான்மர் நாட்டவர்கள் மணிப்பூருக்குள் நுழைவதைத் தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு எல்லைப் பாதுகாப்புப் படையான அசாம் ரைபிள்ஸிடம் ஏற்கனவே தெளிவாகத் தெரிவித்திருந்ததாக மணிப்பூர் அரசு கூறியுள்ளது. மேலும், இந்தியாவிற்குள் நுழைந்த மியான்மர் நாட்டினரின் பயோமெட்ரிக்ஸ் மற்றும் புகைப்படங்களை பத்திரமாக வைத்திருக்குமாறு சந்தேல் மாவட்ட துணை ஆணையர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளருக்கு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.