சென்னை புழல் ஏரியில் இருந்து 200 கன அடி நீர் திறப்பு
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், உள்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அடுத்த 5 நாட்களுக்கு மாநிலம் முழுவதும் லேசானது முதல் மிதமானது வரை இடி மின்னலுடன் மழை பெய்யக்கூடும் என்று வானிலை அறிக்கை தெரிவித்துள்ளது. இந்நிலையில், அணைகள் வேகமாக நிரம்பி வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 200 கன அடி நீரானது சென்னை புழல் ஏரியில் இருந்து திறந்துவிடப்பட்டுள்ளது. புழல் ஏரியானது 21.2 அடி உயரம் கொண்டுள்ள நிலையில், தற்போது 19.42 அடி வரை நீர் நிரம்பியுள்ளது என்று கூறப்படுகிறது.
கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
இந்த ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 570 கன அடியாக உள்ள நிலையில், குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து 159 கன அடி நீர் வெளியேற்றப்பட்டுள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. அதேபோல் 3,300 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் தற்போது 2,898 மில்லியன் கன அடி நீர் உள்ளது. இதனிடையே ஏரியில் இருந்து நீர் திறக்கப்பட்டுள்ள காரணத்தினால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் புழல் ஏரியில் இருந்து நீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் வடகரை, கொசப்பூர், சடையங்குப்பம், நாரவாரிக்குப்பம், மணலிபுதூர், கிராண்ட்லைன் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்புடன் இருக்கும் படி மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கிறது.