புழல் சிறை கைதிகள் தப்பி ஓடிய விவகாரம்: உதவி ஜெயிலர் உள்பட 7 பேர் சஸ்பெண்ட்
செய்தி முன்னோட்டம்
சென்னை புழல் மத்திய சிறையில் அடுத்தடுத்து இரு கைதிகள் தப்பி ஓடிய சம்பவத்தில், பாதுகாப்புப் பணியில் அலட்சியமாக செயல்பட்டதாக ஒரு உதவி ஜெயிலர் மற்றும் 6 சிறைக் காவலர்கள் என மொத்தம் 7 பேரை பணியிடை நீக்கம் செய்து சிறைத்துறை டி.ஜி.பி சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை மாலை உணவு நேரத்தின்போது நேபாள நாட்டை சேர்ந்த விசாரணைக் கைதி சுதீப் (திருட்டு வழக்கு) தனது அறையில் இல்லாதது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து, நேற்று, புதன்கிழமை மதியம் உணவு இடைவேளையின்போது, போக்சோ வழக்கில் தண்டனை பெற்று சிறை அங்காடியில் வேலை பார்த்து வந்த சுரேஷ் என்பவரும் அங்கிருந்து தப்பியோடியது அதிகாரிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
விசாரணை
தப்பியோடிய கைதி பிடிபட்டார்
சிறை முழுவதும் தேடியும் கைதிகள் கிடைக்காததைத் தொடர்ந்து புழல் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
தப்பியோடியவர்களை பிடிக்க அமைக்கப்பட்ட தனிப்படையினர் தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு, திருமங்கலம் பகுதியில் சுற்றித்திரிந்த நேபாள கைதி சுதீப்பை மீண்டும் மடக்கிப் பிடித்து சிறையில் அடைத்தனர்.
தலைமறைவாக உள்ள மற்றொரு கைதி சுரேஷை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
நடவடிக்கை
7 பேர் சஸ்பெண்ட்: டிஜிபி நடவடிக்கை
பலத்த பாதுகாப்பு நிறைந்த புழல் சிறையில் இருந்து அடுத்தடுத்து கைதிகள் தப்பியோடியது குறித்து உயர் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர்.
முதற்கட்ட விசாரணையில் சிறைக் காவலர்களின் கடுமையான கவனக்குறைவு மற்றும் பணி அலட்சியமே காரணம் என்பது உறுதியானது.
இதனையடுத்து, பாதுகாப்புப் பணியில் அலட்சியமாக இருந்த 6 சிறைக் காவலர்கள் மற்றும் 1 உதவி ஜெயிலர் என மொத்தம் 7 பேரை சஸ்பெண்ட் செய்து சிறைத்துறை டி.ஜி.பி சந்தீப் ராய் ரத்தோர் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.