காவலர்களுடன் காலிஸ்தானி ஆதரவாளர்கள் மோதல்: என்ன நடக்கிறது அமிர்தசரஸில்
காலிஸ்தானி ஆதரவு தலைவர் அம்ரித்பால் சிங்கின் நெருங்கிய உதவியாளர் லவ்பிரீத் தூஃபான் இன்று(பிப் 23) கைது செய்யப்பட்டதற்கு எதிராக மாபெரும் போராட்டங்கள் நடத்தப்பட்டன. காலிஸ்தானி என்பது சீக்கியர்களுக்காக கோரப்படும் தனி தேசமாகும். 'வாரிஸ் பஞ்சாப்-டி' தலைவரின் ஆதரவாளர்கள் வாள்கள் மற்றும் துப்பாக்கிகளை ஏந்தியபடி அமிர்தசரஸில் உள்ள அஜ்னாலா காவல் நிலையத்திற்கு வெளியே அமைக்கப்பட்டிருந்த போலீஸ் தடுப்புகளை மீறி உள்ளே நுழைந்தனர். போராட்டத்தினால் 6 போலீசார் காயமடைந்து அஜ்னாலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, போராட்டக்காரர்களை கட்டுப்படுத்தும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், ANI செய்தி நிறுவனத்திடம் பேசிய 'வாரிஸ் பஞ்சாப் டி' தலைவர் அம்ரித்பால் சிங், இந்த வழக்கில் FIR அரசியல் உள்நோக்கத்துடன் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.
FIRஐ ரத்து செய்யாவிட்டால் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும்: அம்ரித்பால்
"அரசியல் உள்நோக்கத்துடன் மட்டுமே FIR பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு மணி நேரத்தில் வழக்கை ரத்து செய்யாவிட்டால், அடுத்து என்ன நடந்தாலும் அதற்கு நிர்வாகமே பொறுப்பாகும். எங்களால் ஒன்றும் செய்ய முடியாது என்று நினைக்கிறார்கள், அதனால் எங்கள் பலத்தை காட்டுவது அவசியம்." என்று அவர் கூறியுள்ளார். மேலும் பேசிய சிங், கடந்த வாரம் கைது செய்யப்பட்ட தனது உதவியாளர்களில் ஒருவர் நிரபராதி என்றும் அவர் சித்திரவதை செய்யப்படுவதாகவும் கூறினார். மேலும், ஒரு மணி நேரத்திற்குள் FIRஐ ரத்து செய்யாவிட்டால் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் அவர் மிரட்டினார். "காலிஸ்தானை நாங்கள் மிகவும் அமைதியான முறையில் தொடர்கிறோம். சிலர் இந்துக்களுக்கான தனி தேசத்தை கேட்கும் போது நாங்கள் ஏன் காலிஸ்தானை கேட்கக்கூடாது." என்று அவர் கூறியுள்ளார்.