பாரிஸிலிருந்து வந்திறங்கிய பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் கைது? டெல்லி ஏர்போர்ட்டில் பரபரப்பு
செய்தி முன்னோட்டம்
பிரான்ஸ் நாட்டிற்கு பயணம் மேற்கொண்டுவிட்டு டெல்லி திரும்பிய பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானை, டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் சுமார் 3 மணி நேரம் காக்க வைத்துத் தடுப்புக் காவலில் வைத்தது போன்ற சூழலை உருவாக்கியதாகவும், பின்னர் அவருக்கு ரூ.50,000 அபராதம் விதித்ததாகவும் ஆம் ஆத்மி கட்சி பகிரங்கக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. இந்தச் சம்பவம் தேசிய அரசியலில் ஆம் ஆத்மி மற்றும் பாஜக இடையே மீண்டும் பெரும் மோதல் வெடிக்கக் காரணமாகியுள்ளது.
அபராதம்
விமான நிலையத்தில் 3 மணி நேர காத்திருப்பு
பாரிஸில் நடைபெற்ற சர்வதேச உணவுப் பொருட்கள் வர்த்தகக் கண்காட்சியில் பஞ்சாப் மாநிலத்தின் உற்பத்திப் பொருட்களை அறிமுகம் செய்துவிட்டு, நேற்றிரவு டெல்லி விமான நிலையத்திற்கு பகவந்த் மான் வந்தடைந்தார்.
அப்போது அவரது உடைமைகள் சோதனை செய்யப்படுவதாகக் கூறி அதிகாரிகள் அவரை வெளியேற விடாமல் நீண்ட நேரம் காக்க வைத்ததாகக் கூறப்படுகிறது.
சுமார் 3 மணி நேரத்திற்குப் பிறகே அவர் வெளியேற அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் புறப்படத் தயாரான போது அதிகாரிகள் அவரிடம் வந்து, "மேலிடத்திலிருந்து கடும் அழுத்தம் வருகிறது" என்று கூறி ரூ.50,000 அபராதம் விதித்ததாக ஆம் ஆத்மி செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
எனினும் இந்த அபராதம் எதற்காக விதிக்கப்பட்டது என்ற முழுமையான விவரங்கள் அதிகாரப்பூர்வமாகத் தெளிவுபடுத்தப்படவில்லை.
விசாரணை
ஆம் ஆத்மி கண்டனம்
ஒரு மாநிலத்தின் முதல்வரை விமான நிலையத்தில் அவமதிக்கும் வகையில் 3 மணி நேரம் நிறுத்தி வைத்தது ஒட்டுமொத்த பஞ்சாப் மக்களுக்கும் இழைக்கப்பட்ட அநீதி என்று ஆம் ஆத்மி மூத்த தலைவர்கள் கடுமையாகச் சாடியுள்ளனர்.
ஏற்கனவே பாரிஸ் செல்வதற்கு மத்திய அரசு அனுமதி மறுத்த நிலையில், பஞ்சாப் - ஹரியானா உயர்நீதிமன்றத்தை நாடியே பகவந்த் மான் இந்தப் பயணத்தை மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேசமயம், பஞ்சாப் எதிர்க்கட்சியான சிரோமணி அகாலி தளத்தின் தலைவர் பிக்ரம் சிங் மஜிதியா கூறுகையில், பகவந்த் மான் மற்றும் அவரது மனைவி நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட அதிக பணத்தை வைத்திருந்தனரா என்ற சந்தேகத்தின் பேரிலேயே சுங்கத்துறை அதிகாரிகள் வழக்கமான சோதனையை மேற்கொண்டதாகவும், அவர் முதல்வர் என்பதால் விசாரணைக்குப் பின் விடுவிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.