மனித எலும்புகளை உண்ண சொல்லி மருமகளை வற்புறுத்திய குடும்பம்: வழக்கு பதிவு
மாந்திரீக சடங்குகளின் மூலம் மருமகளை கருத்தரிக்க செய்ய பொடிசெய்யப்பட்ட மனித எலும்புகளை வற்புறுத்தி உண்ண வைத்ததாக 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்தப் பெண் அளித்த புகாரை அடுத்து, புதன்கிழமை அன்று புனே போலீசார் அவரது கணவர், மாமியார், மாந்திரீகர் உட்பட ஏழு பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். "மூடநம்பிக்கை தடுப்புச் சட்டம் (மகாராஷ்டிரா நரபலி, மனிதாபிமானமற்ற, தீய, அகோரி நடைமுறைகள் மற்றும் மாந்திரீக தடுப்பு சட்டம், 2013) பிரிவு 3 உடன் ஐபிசியின் 498 ஏ, 323, 504, 506 ஆகியவற்றின் கீழ் ஏழு நபர்களுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது." என்று புனே நகர காவல்துறையின் துணை போலீஸ் கமிஷனர் சுஹைல் சர்மா கூறியுள்ளார்.
சுடுகாட்டிற்கு அழைத்து சென்று மாந்திரீகம் செய்த குடும்பம்
ANI வெளியிட்ட செய்தியின் படி, அந்த பெண் இருவேறு விஷயங்களுக்கு புகாரளித்துள்ளார். முதல் புகாரில், அவரது திருமணத்தின் போது(2019 இல்) ரொக்கம், தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் அடங்கிய வரதட்சணையை அவரது கணவர் குடும்பம் கேட்டதாக குற்றம் சாட்டி இருக்கிறார். இரண்டாவது புகார் மனுவின்படி, போலீசார் மூடநம்பிக்கை எதிர்ப்பு மற்றும் சூனியம் தடுப்புச் சட்டம் ஆகியவற்றின் பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். அந்த பெண்ணை சுடுகாட்டிற்கு அழைத்து சென்று எரிந்து கிடந்த பிணங்களின் மிச்சத்தை உண்ண சொன்னதாகவும் அந்த புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது போக, அமாவாசை போன்ற நாட்களில் வீட்டில் மாந்திரீக பூஜைகளை செய்ய சொல்லி வற்புறுத்தியது, அகோரி பயிற்சிகளை செய்ய வைத்தது போன்ற பல விவரங்கள் அந்த புகாரில் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.