புனே பேருந்து பாலியல் வன்கொடுமை குற்றவாளி 2 நாள் தேடுதலுக்குப் பிறகு கைது
செய்தி முன்னோட்டம்
புனேவின் ஸ்வர்கேட் பணிமனையின் பேருந்திற்குள் 26 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட நபர், மகாராஷ்டிராவின் ஷிரூரில் நள்ளிரவு நடத்தப்பட்ட ஒரு பெரிய தேடுதலுக்குப் பிறகு கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட குற்றவாளி தத்தாத்ரே ராம்தாஸ் காடே (37), ஷிரூரில் உள்ள ஒரு பண்ணையில் மறைந்திருந்தார்.
நேற்று முதல், புனே காவல்துறையின் 13 குழுக்கள் அவரைத் தேடி வந்தன.
இரவில், அவர் ஒருவரின் வீட்டிற்கு உணவருந்தச் சென்றார், அந்த நபர் உடனடியாக காவல்துறையினருக்குத் தகவல் அளிக்கவே, அவர் கைது செய்யப்பட்டார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
விவகாரம்
பேருந்துக்காக காத்திருந்த பெண்ணிடம் அத்துமீறிய நபர்
செவ்வாய்க்கிழமை அதிகாலை 5.45 மணியளவில் ஒரு நடைமேடையில் சதாரா மாவட்டத்திற்கு பேருந்துக்காக காத்திருந்தபோது, அந்தப் பெண்ணை தத்தாத்ரே பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது.
சதாராவுக்கான பேருந்து வேறொரு நடைமேடையில் வந்துவிட்டதாகக் கூறி அவர் அவளை தவறாக வழிநடத்தி, வளாகத்தில் வேறு இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த காலியான ஏசி பேருந்திற்கு அழைத்துச் சென்றுள்ளார் தத்தாத்ரே.
பேருந்தின் உள்ளே விளக்குகள் அணைந்திருந்ததால், அந்த பெண் ஏறத் தயங்கியுள்ளார்.
ஆனால் அது சரியான பேருந்து என்று அவளை நம்ப வைத்து, உள்ளே நுழைந்ததும், தத்தாத்ரே அவரை பின்தொடர்ந்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக பாதிக்கப்பட்ட அந்தப் பெண் போலீசாரிடம் தெரிவித்தார்.
எதிர்வினை
இந்த சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது
இந்த சம்பவம் நாடு முழுவதும் பரவலான சீற்றத்தைத் தூண்டியுள்ளது.
அரசியல் தலைவர்கள் உட்பட பலரும் கடுமையான நடவடிக்கை மற்றும் நீதியை கேட்டு எதிர்ப்பு தெரிவித்தனர்.
குற்றம் சாட்டப்பட்ட தத்தாத்ரே, புனே மற்றும் அஹில்யாநகர் மாவட்டங்களில் திருட்டு, கொள்ளை மற்றும் சங்கிலி பறிப்பு போன்ற அரை டஜன் வழக்குகளில் குற்றவாளியாக கண்டறியப்பட்டவர்.
அப்படி ஒரு வழக்கில் கைதான இவர், 2019 முதல் ஜாமீனில் வெளியே வந்தார். இரண்டு நாட்களுக்கும் மேலாக தத்தாத்ரே தலைமறைவாக இருந்ததால், அவரை குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டது.
துப்புகளுக்காக ஒரு ஹாட்லைன் எண்ணும் வெளியிடப்பட்டது.