புதுச்சேரி அமைச்சர் நீக்கப்பட்டதற்கு மத்திய அரசு ஒப்புதல்
புதுச்சேரி போக்குவரத்து துறை அமைச்சர் சந்திர பிரியங்கா அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டதற்கு, மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன் மூலம் அவர் பதவி விலகினாரா அல்லது பதவியில் இருந்து நீக்கப்பட்டாரா என நீடித்து வந்த குழப்பம் தெளிவடைந்துள்ளது. புதுச்சேரி நெடுங்காடு தொகுதியில் என் ஆர் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சந்திர பிரியங்கா, போக்குவரத்து மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராக பதவி வகித்துவந்தார். இந்நிலையில் இவர், இம்மாதம் 10 ஆம் தேதி அமைச்சர் பதவியில் இருந்து விலகுவதாக, புதுச்சேரி துணை நிலை ஆளுநருக்கு கடிதம் அனுப்பினார். அந்த கடிதத்தில் தான் ஜாதி மற்றும் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
சந்திர பிரியங்கா அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்
இந்த சர்ச்சை குறித்து புதுச்சேரி முதல்வர் ரங்கசாமிடம் கேட்டபோது அவர் பதிலளிக்க மறுத்துவிட்டார். அதே சமயம், புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன், சந்திர பிரியாவின் செயல்பாடுகள் திருப்தி அளிக்காததால், அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்படுவதாக தெரிவித்தார். மேலும் சந்திர பிரியங்கா ராஜினாமா செய்வதற்கு முன்பே, முதல்வர் ரங்கசாமி சந்திர பிரியங்காவை நீக்க கடிதம் வழங்கியிருந்ததாக தமிழிசை கூறி இருந்தார். இந்நிலையில் கடந்த 12 நாட்களாக சந்திர பிரியங்கா அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டாரா, அல்லது பதவி விலகாரா என்ற குழப்பம் நீடித்து வந்தது. தற்போது அமைச்சர் பதவியில் இருந்து சந்திர பிரியங்கா நீக்கப்பட்டதற்கு, மத்திய அரசு ஒப்புதல் வழங்கி உள்ளதாக புதுச்சேரி சபாநாயகர் செல்வம் தெரிவித்துள்ளார்.