'பொது சிவில் சட்டம் குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம்': இந்திய சட்ட ஆணையம்
வரும் 14ஆம் தேதி வரை பொது சிவில் சட்டம் குறித்து பொதுமக்களும் மத அமைப்புகளும் கருத்து தெரிவிக்கலாம் என்று இந்திய சட்ட ஆணையம் அறிவித்துள்ளது. பொதுவாக, இந்தியாவில் உள்ள தனிப்பட்ட சட்டங்கள் மத அடிப்படையில் பிரிக்கப்பட்டவைகளாகும். திருமணம், குழந்தை தத்தெடுப்பு போன்ற விஷயங்களுக்கு ஒவ்வொரு மதத்திற்கும் தனித்தனியான சட்டங்கள் இருக்கிறது. இந்த சட்டங்கள் எல்லாவற்றையும் நீக்கிவிட்டு பொதுவான சிவில் சட்டம் ஒன்றை கொண்டு வர வேண்டும் என்று நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு முயற்சித்து வருகிறது. ஆனால், காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மேலும், வரவிருக்கும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் இது குறித்து விவாதிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
பொதுமக்கள் கருத்துக்களை அனுப்பி வைக்க வேண்டிய முகவரிகள்:
கடந்த வாரம், மத்தியப் பிரதேசத்தின் ஒரு நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, "ஒரே மாதிரியான சிவில் சட்டத்தை அமல்படுத்துவது பாஜகவின் தேர்தல் அறிக்கையின் ஒரு பகுதியாகும். ஒரே குடுமபத்தில் உள்ளவர்களுக்கு வெவ்வேறு சட்டம் இருந்தால் அது வேலைக்கு ஆகாது. அதே போல் ஒரு நாடு இரண்டு சட்டங்களின் கீழ் இயங்க முடியாது." என்று கூறி இருந்தார். இந்நிலையில், "இந்த சட்டம் தொடர்பான கருத்துகளை பொதுமக்கள் membersecretary-lci@gov.in என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பலாம். அல்லது 'உறுப்பினர் செயலர், இந்திய சட்ட ஆணையம், 4-வது தளம், லோக் நாயக் பவன், கான் மார்க்கெட், புதுடெல்லி-110 003' என்ற முகவரிக்கும் தபால் மூலம் கருத்துகளை அனுப்பிவைக்கலாம்." என்று இந்திய சட்ட ஆணையம் கூறியுள்ளது.