தேர்தல் ஆணையத்திற்கு முன்பு போராட்டம் நடத்திய திரிணாமுல் எம்.பி.க்கள் கைது
திரிணாமுல் காங்கிரஸின் 10 பேர் கொண்ட பிரதிநிதிகள் குழு, தேர்தல் ஆணையத்தின் டெல்லி தலைமையகத்திற்கு வெளியே தர்ணா போராட்டத்தில் இன்று ஈடுபட்டது. அதனை தொடர்ந்து போலீஸார் அந்த 10 பேரையும் கைது செய்தனர். பாஜக தலைமையிலான மத்திய அரசு "மத்திய விசாரணை அமைப்புகளை தவறாகப் பயன்படுத்துகிறது" என்ற புகாருடன், தேர்தல் ஆணையத்தின் முழு பெஞ்சை சந்திக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து அந்த எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நான்கு மத்திய புலனாய்வுக் குழுக்களின் தலைவர்களை தேர்தலுக்கு முன்னதாக தேர்தல் ஆணையம் நீக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
டெரெக் ஓ பிரையன் தலைமையிலான எம்.பி.க்கள் குழு போராட்டம்
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ராஜ்யசபா தலைவர் டெரெக் ஓ பிரையன் தலைமையிலான எம்.பி.க்கள் குழு இந்த போராட்டத்தில் ஈடுபட்டது. டோலா சென், சகாரிகா கோஷ், சாகேத் கோகலே மற்றும் சாந்தனு சென் ஆகியோரும் அவருடன் இருந்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட தலைவர்களை வெளியேறுமாறு பலமுறை காவல்துறை கோரிக்கை விடுத்ததது. ஆனால், அவர்கள் அதற்கு மறுப்பு தெரிவித்ததை அடுத்து காவல்துறை அவர்களை கைது செய்தது. ராஜ்யசபா தலைவர் டெரெக் ஓ பிரையனை காவல்துறையினர் பேருந்துக்கு இழுத்து செல்லும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது. பொதுத் தேர்தலுக்கு முன்னதாக எதிர்க்கட்சித் தலைவர்களை குறிவைத்து மத்திய விசாரணை அமைப்புகள் செயல்பட்டு வருவதாகவும், இது முற்றிலும் அரசியல் ரீதியானது என்றும் திரிணாமுல் தலைவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.