தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக குடிநீர் விநியோகிப்பதில் சிக்கல்
தமிழ்நாடு மாநிலத்தின் தென் மாவட்டங்களான கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. மீட்பு பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனிடையே கடந்த 17 மற்றும் 18 தேதிகளில் பெய்த இந்த கனமழையால் மணிமுத்தாறு, சேர்வலாறு, பாபநாசம், காரையாறு உள்ளிட்ட அணைகளில் நீர் நிரம்பி, உபரிநீர் திறந்துவிடப்பட்டது. அணைகளில் இருந்து உபரி நீர் திறந்துவிடப்பட்டதை தொடர்ந்து தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கிறது. இதன் காரணமாக ஆற்றங்கரை ஒட்டியுள்ள பகுதிகள் கடும் சேதமடைந்துள்ளது. அப்பகுதிகளில் உள்ள சாலைகள், பாலங்கள் உள்ளிட்டவையும் சேதமடைந்ததால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
ஆற்றுப்படுகையில் அமைந்துள்ள 300க்கும் மேற்பட்ட உறை கிணறுகளும் சேதம்
இந்நிலையில் தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக ராமநாதபுரம், தென்காசி, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு குடிநீர் விநியோகிப்பதில் புதியதாக சிக்கல் ஏற்பட்டுள்ளது என்று தற்போதைய தகவல்கள் தெரிவிக்கிறது. இந்த ஆற்று படுகையில் அமைந்துள்ள 300க்கும் மேற்பட்ட உறை கிணறுகள் முற்றிலும் பாதிப்படைந்துள்ளது. மேலும், குடிநீர் எடுத்து செல்லும் குழாய்கள் முழுவதும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளது. அதே போல் நீரேற்றும் நிலையங்களும், உறை கிணறுகளின் மின் மோட்டர்களும் வெள்ளநீரால் சேதமடைந்துள்ளது. இதன்படி தற்போது குடிநீர் விநியோகிப்பதில் இருக்கும் பாதிப்புகளை கண்டறியும் பணிகள் மேற்கொண்டுள்ள நிலையில், ரூ.100 கோடிக்கும் மேல் சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.