50க்கும் மேற்பட்ட சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி முதல்வர் கைது: ஹரியானாவில் பரபரப்பு
ஹரியானா மாநிலம் ஜிந்த் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளி முதல்வர் ஒருவர் 50க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தற்காக கைது செய்யப்பட்டுள்ளார். "குற்றம் சாட்டப்பட்ட பள்ளி முதல்வர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டார். அவர் ஐந்து நாட்களாக தலைமறைவாக இருந்தார். ஆனால் எங்கள் குழு அவரை கண்டுபிடித்து கைது செய்தது. இதனையடுத்து, அவர் ஒரு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார். மேலும் விசாரணை நடத்துவதற்காக அவரை போலீஸ் காவலில் வைக்க நாங்கள் கோருவோம்." என்று வழக்கை விசாரிக்கும் ஐந்து பேர் கொண்ட சிறப்புப் புலனாய்வுக் குழுவின் தலைவரான துணைக் காவல் கண்காணிப்பாளர் அமித் குமார் பாட்டியா தெரிவித்துள்ளார். இந்த குற்றசாட்டினால் அந்த பள்ளி முதல்வர் சில நாட்களுக்கு முன் ஜிண்ட் நிர்வாகத்தால் இடைநீக்கம் செய்யப்பட்டார்.
60 எழுத்துப்பூர்வ புகார்களை பெற்ற மாநில மகளிர் ஆணையம்
ஜிந்த் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளியில் பயிலும் 50க்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கள் பள்ளி முதல்வர் தங்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றம் சாட்டியுள்ளனர் என்று ஹரியானா மாநில மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில், ஹரியானா காவல்துறை அந்த பள்ளி முதல்வர் மீது வழக்குப் பதிவு செய்தது. "பள்ளி முதல்வருக்கு எதிராக மாணவிகளிடம் இருந்து 60 எழுத்துப்பூர்வ புகார்களை நாங்கள் பெற்றுள்ளோம். அதில் 50 புகார்கள் பாலியல் தொல்லைக்கு ஆளான மாணவிகளால் கொடுக்கப்பட்டது. மேலும் 10 சிறுமிகள், தங்கள் புகாரில், பள்ளி முதல்வர் பிற மாணவிகளிடம் தவறாக நடந்து கொள்வது தங்களுக்குத் தெரியும் என்று கூறியுள்ளனர்." என்று மாநில மகளிர் ஆணைய தலைவர் ரேணு பாட்டியா தெரிவித்துள்ளார்.