வாகனங்களை நிறுத்தி குழந்தைகளுக்கு சாக்லேட் வழங்கிய குடியரசு தலைவர் முர்மு
கேரளாவின் தெற்கு மாவட்டத்தில் தனக்காக வழியோரத்தில் காத்திருந்த பள்ளிக் குழந்தைகளுக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு சாக்லேட்களை வழங்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி இருக்கிறது. கேரளாவின் கருநாகப்பள்ளியில் இன்று காலை(மார் 17) குடியரசு தலைவர் தனது அரசாங்க வாகனத்தில் இருந்து கீழே இறங்கி குழந்தைகளுக்கு சாக்லேட் கொடுத்திருக்கிறார். இந்த சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ பரவலாக பேசப்பட்டு வருகிறது. குடியரசு தலைவர் முர்மு, கேரளாவிற்கு செல்வது இதுவே முதல்முறையாகும். உற்சாகமாக குழந்தைகள் தனது காரை நோக்கி கை அசைப்பதைக் கண்ட குடியரசு தலைவர், கடற்கரை நெடுஞ்சாலையில் வாகனத் தொடரணியை திடீரென நிறுத்தினார். அதன் பின், கீழே இறங்கிய அவர், மகிழ்ச்சியுடன் அந்த குழந்தைகள் அருகே சென்று அவர்களுக்கு சாக்லேட் வழங்கியுள்ளார்.