காவிரி விவகாரம் - தமிழக ஆளுநரை சந்தித்தார் பிரேமலதா விஜயகாந்த்
தமிழக காவிரி விவகாரம் குறித்து தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று(செப்.,30) தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களை சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், "தமிழ்நாட்டிற்கு சேர வேண்டிய காவிரி நீர் விவகாரம் குறித்து மத்திய அரசு செவி சாய்த்து, நமது விவசாயிகளின் உரிமைகளை பெற்றுத்தர வேண்டும் என்று ஆளுநரிடம் கேட்டுக்கொண்டேன்" என்று கூறியுள்ளார். தொடர்ந்து அவர், நீண்டகாலமாக தொடரும் இந்த பிரச்சனைக்கு தேசிய நதிகளை இணைப்பதே தீர்வாகும் என்பதால் அதற்கான நடவடிக்கைகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் மேற்கொள்ளவேண்டும் என்றும் கவர்னரிடம் வலியுறுத்தி பேசியதாக தெரிகிறது. அதன்பின்னர் அவர் பேசுகையில், "கர்நாடகா உபரிநீர் வைத்துக்கொண்டே தமிழகத்திற்கு தர மறுக்கிறது"என்றும் தெரிவித்தார்.
பலதரப்பட்ட கோரிக்கைகளை முன்வைத்த பிரேமலதா விஜயகாந்த்
அதனைத்தொடர்ந்து,"அவர்கள் தமிழக மக்கள், தமிழகத்திற்கு எதிராக செய்யும் அனைத்து செயல்களுமே கண்டனத்திற்குரியதாகும். தமிழக நீர்வளத்துறை அமைச்சர் டெல்லி சென்று வருகிறார், ஆனால் பிரச்சனை முடிவுக்கு வரவில்லை" என்று குற்றம்சாட்டி பேசியுள்ளார். மேலும், தமிழகத்திற்கு காவிரி நீரை பெற்றுத்தந்து விவசாயிகளை காப்பாற்றுவது அரசின் கடமை என்றும், நீர்வளத்துறை அமைச்சர் தண்ணீரை சிக்கனமாக உபயோகிப்போம் என்று கூறுவதே பெரும் கண்டனத்திற்குரியது என்றும் கூறியுள்ளார். இதனை தவிர்த்து அவர் கொடுத்த கோரிக்கை மனுவில், தமிழக மீனவர்கள் பிரச்சனையை தீர்க்க கச்சதீவினை மீட்க வேண்டும், தமிழக கனிமவள கொள்ளையை தடுக்க வேண்டும், டாஸ்மாக் இல்லா தமிழகத்தை உருவாக்க வேண்டும், ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு போராட்டத்தினை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று பல தரப்பு கோரிக்கைகளை முன்வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.