இந்தியாவில் லித்தியம் கண்டுபிடிப்பு: இதனால் என்ன பலன் கிடைக்கும்
நாட்டிலேயே முதன்முறையாக ஜம்மு காஷ்மீரில் 5.9 மில்லியன் டன் லித்தியம் இருப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு சமீபத்தில் தெரிவித்தது. லித்தியம், EV பேட்டரிகளில் பயன்படுத்தப்படும் முக்கிய கூறுகளில் ஒன்றாகும். இதை கண்டுபிடித்திருப்பதால் இந்தியாவிற்கு என்ன மாதிரியான பலன்கள் எல்லாம் கிடைக்கும் என்பதை இப்போது பார்க்கலாம். லித்தியம் அடிப்படையிலான பேட்டரிகள், மின்சார வாகனங்கள், சோலார் உபகரணங்கள் போன்றவற்றைத் தயாரிக்கும் நிறுவனங்கள் இனி சீனா மற்றும் பிற நாடுகளை நம்பி இருக்க தேவையில்லை. உள்நாட்டில் லித்தியம் கிடைத்தால், பேட்டரி உற்பத்தியின் செலவு 5% முதல் 7% வரை குறையும் என்று கூறப்படுகிறது. வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் தரவுகளின்படி, கடந்த ஆண்டு, லித்தியம் மற்றும் லித்தியம்-அயன் இறக்குமதிக்கு இந்தியா, ரூ.163 பில்லியன் செலவிட்டுள்ளது.
லித்தியத்தை உலோகமாக மாற்றுவதில் இருக்கும் சவால்கள்
இறக்குமதியை சார்ந்திருப்பவர்கள், டாலருக்கும் ரூபாய்க்கும் இடையிலான ஏற்றத்தாழ்வுகளால் லித்தியத்தின் விலை ஏற்ற இறக்கங்களை அடிக்கடி எதிர்கொள்கின்றனர். மின்சார வாகனங்களின்(EV) தயாரிப்புகள் லித்தியத்தை நம்பி தான் இருக்கிறது என்பதால், 'மேக் இன் இந்தியா' போன்ற திட்டங்களுக்கு இது மிக பெரும் பலமாக இருக்கும். உள்நாட்டில் லித்தியம் இருப்பு உள்ளதால், லித்தியம் அயன் பேட்டரிகளின் விலை வெகுவாக குறையலாம். ஆனால், ஜம்மு-காஷ்மீரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள லித்தியம் மற்ற தாதுக்களுடன் கலந்து பாறைகளாக இருப்பதால், அதை பயன்படுத்துவதற்கு ஏற்ற உலோகமாக மாற்றுவதற்கு பிரித்தெடுத்து சுத்திகரிக்கும் செயல்முறைகளை செய்ய வேண்டும். அதற்கு செலவுகள் அதிகம் ஆகலாம் என்ற சவாலையும் சில நிபுணர்கள் முன் வைக்கின்றனர்.