பாலியல் புகார் வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணா, அவரின் தந்தைக்கு விசாரணை குழு சம்மன்
கர்நாடகாவின் ஹாசன் தொகுதி எம்பி பிரஜ்வல் ரேவண்ணா மற்றும் அவரது தந்தையும், ஜேடி(எஸ்) மூத்த தலைவருமான எச்டி ரேவண்ணா ஆகியோருக்கு, பாலியல் முறைகேடு வழக்கில் விசாரிக்க கர்நாடக காவல்துறையின் சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஞாயிற்றுகிழமை ரேவண்ணாவின் வீட்டில் பணிபுரிந்த ஒரு பெண், காவல்நிலையத்தில் ரேவண்ணா மீது பாலியல் புகார அளித்திருந்தார். அதனைத்தொடர்ந்து, தந்தை-மகன் இருவர் மீது பாலியல் துன்புறுத்தல், பின்தொடர்தல், மிரட்டல் மற்றும் பெண்ணின் கண்ணியத்தை சீர்குலைத்ததற்காக பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் ரேவண்ணா இருக்கும் பல பாலியல் சார்ந்த வீடியோக்கள் பரவியதையடுத்து, இது பற்றி விசாரிக்க குற்றப் புலனாய்வுத் துறையின் கூடுதல் காவல்துறை இயக்குநர் ஜெனரல் பி.கே.சிங் தலைமையிலான எஸ்ஐடிக்கு எஃப்ஐஆர் பரிந்துரைக்கப்பட்டது.
ரேவண்ணா மீதான பாலியல் புகார்களுக்கு NCW கூறுவது என்ன?
பிரஜ்வல் ரேவண்ணா மீதான பாலியல் புகார்கள் தொடர்பாக மூன்று நாட்களுக்குள் விரிவான அறிக்கையை கர்நாடக காவல்துறையிடம் தேசிய மகளிர் ஆணையம் (NCW) கோரியுள்ளது. பிரஜ்வல் ரேவண்ணா நூற்றுக்கணக்கான பெண்களுடன் பாலியல் ரீதியாக தகாத நடத்தையில் ஈடுபட்டதாகக் கூறப்படும், சமூக ஊடகங்களில் ஏராளமான ஆட்சேபனைக்குரிய வீடியோக்கள் பரவி வருவதால் NCW மிகுந்த கவலையை வெளிப்படுத்தியது. அதே நேரத்தில், பிரஜ்வல் ரேவண்ணா நாட்டில் இல்லை எனவும், ஏப்ரல் 26ஆம் தேதி கர்நாடகாவில் இரண்டாம் கட்ட மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு வெளிநாடு சென்றதாகக் கூறப்படுகிறது. NCW புகார் அளித்தும், ரேவண்ணாவை கைது செய்யாமல், நாட்டை விட்டு வெளியேற அனுமதித்ததன் காரணம் என்ன என்று NCW கேள்வி எழுப்பியது.