தமிழ்நாட்டில் 11,096 கோடி யூனிட்களாக மின் நுகர்வு அதிகரிப்பு
தமிழ்நாட்டில் 2023-24ம் நிதியாண்டில் மின்நுகர்வு 11,096 கோடி யூனிட்களாக அதிகரித்துள்ளது என ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது. 2022-23ம் நிதியாண்டில் மின்நுகர்வு 10,354 கோடி யூனிட்கள் இருந்த நிலையில், தற்போது அந்த அளவு 742 கோடி யூனிட்கள் அதிகரித்து, மாநிலத்தின் மின்சார பயன்பாட்டில் குறிப்பிடத்தக்க உயர்வை கண்டுள்ளது. தமிழ்நாட்டில் நாள்தோறும் சராசரியாக 30 கோடி யூனிட்கள் மின்சாரம் பயன்படுத்தப்பட்டு வருவதாக அந்த அறிக்கை தெரிவித்துள்ளது. இந்த பயன்பாடு கோடை வெயிலால் அதிகரித்து, ஏப்ரல் 30ம் தேதி அதிகபட்சமாக 45.43 கோடி யூனிட்கள் மின்நுகர்வு காணப்பட்டதாக கூறப்படுகிறது. வீடுகளில் பயன்படுத்தப்படும் ஏ.சி. சாதனங்களும், மின்சார வாகனங்களின் எண்ணிக்கையும் மின்நுகர்வை அதிகரிக்கக் காரணமாக உள்ளன.
தொழிற்சாலைகளிலும் அதிகரித்த மின் நுகர்வு
2022-23ம் நிதியாண்டில் வீடுகளுக்கான மின்சார சாதனங்களின் நுகர்வு 3,060 கோடி யூனிட்கள் இருந்த நிலையில், இந்தாண்டு அது 3,226 கோடி யூனிட்களுக்கு உயர்ந்துள்ளது. மேலும், உயரழுத்த தொழிற்சாலைகளில் மின்நுகர்வு 2022-23ம் நிதியாண்டில் 3,012 கோடி யூனிட்கள் இருந்த நிலையில், கடந்த நிதியாண்டில் அது 3,242 கோடி யூனிட்களாக உயர்ந்துள்ளது. விவசாயத் துறையில் மின்சார பயன்பாடு 1,417 கோடி யூனிட்களில் இருந்து 1,583 கோடி யூனிட்களுக்கு அதிகரித்துள்ளது. 2022-23 மற்றும் 2023-24ம் நிதியாண்டுகளில், தமிழ்நாட்டில் மின்சார வாகனங்களுக்காக 193 சார்ஜிங் மையங்கள் செயல்பட்டுள்ளன, அவற்றில் 35 லட்சம் யூனிட்கள் மின்சாரம் பயன்படுத்தப்பட்டது.