அயர்லாந்தில் இருந்து ரூ.9,000 கோடி பணம் வருவதாக கூறி தொழிலதிபர்களிடம் பணம் பறிப்பு - க்ரைம் ஸ்டோரி
இந்தவார Newsbytes.,இன் க்ரைம் ஸ்டோரி: அயர்லாந்து நாட்டில் இருந்து ரூ.9,000 கோடி பணம் முதலீடு செய்யப்படவுள்ளது என்று கூறி, அதன் மூலம் வட்டி இல்லாமல் கோடி கணக்கில் பணத்தினை கடனாக தருவதாகவும் கூறி பெரும் தொழிலதிபர்களிடம் 3 பேர் கொண்ட மோசடி கும்பல் பணம் பறித்துள்ளது. இது குறித்து சென்னையில் எஸ்வி டெக் என்னும் தனியார் நிறுவனத்தினை சேர்ந்த வீரமணி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அயர்லாந்து மருத்துவ நிறுவனத்திலிருந்து கோடி கணக்கில் பணம் வருவதாக கூறிய மோசடி கும்பல்
அதன்படி, அயர்லாந்தில் இருந்து மருத்துவ நிறுவனம் ஒன்று கோவாவில் தாங்கள் நடத்திவரும் நிறுவனத்திற்கு ரூ.9,102 கோடி பணத்தினை முதலீடாக அனுப்பவுள்ளது என கூறிய இந்த மோசடி கும்பல் அதற்கான ஆவணங்களையும் காண்பித்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் தங்களுக்கு ரிசர்வ் வங்கி ஊழியர் ஒருவர் உதவி செய்கிறார் என்றும் கூறியுள்ளனர். தொடர்ந்து, அந்த முதலீடு தொகையினை பெறுவதற்கு தற்போது குறைந்தபட்சத்தொகை தேவைப்படுகிறது என்று தொழிலதிபர்களிடம் கூறி அவர்களிடம் பணத்தினை ஏமாற்றி பெற்றுள்ளனர் என்று கூறப்படுகிறது.
ரூ.10 கோடி வரை வட்டியில்லா கடன் கிடைக்கும் என்பதை நம்பிய தொழிலதிபர்கள்
முதலீடு தொகை வந்ததும் ரூ.10 கோடி வரை வட்டியில்லா கடன் கிடைக்கும் என்பதை நம்பிய தொழிலதிபர்கள் கோடி கணக்கில் பணத்தினை கொடுத்து ஏமாந்துள்ளனர். இதனை தொடர்ந்து, தன்னிடம் ரூ.1.40 கோடி பணத்தினை பெற்றுக்கொண்டு கடனும் வழங்காமல், கொடுத்த பணத்தினையும் திருப்பி தராமல் ஏமாற்றுவதாக ராஜேஷ்(44), ரங்கராஜன்(38), சுரேஷ்குமார்(48) உள்ளிட்ட மூவர் மீது வீரமணி புகார் அளித்துள்ளார். மேலும் ரங்கராஜன் என்பவர் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் அவர் புகாரில் கூறியுள்ளார்.
புகாரின் பேரில் மூவர் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்ட காவல்துறை
இது குறித்து காவல்துறை மேற்கொண்ட விசாரணையில், சுரேஷ்குமார் என்பவர் நட்சத்திர தங்கும் விடுதிகளில் மட்டுமே தங்கி தொழிலதிபர்களை சந்தித்து பணத்தை ஏமாற்றி வந்தது தெரியவந்துள்ளது. மேலும் இவர் பெங்களூரில் கடந்த சில மாதங்களாகவே தலைமறைவு வாழ்க்கையினை வாழ்ந்து வருகிறாராம். தொடர்ந்து ரங்கராஜன் சென்னையில் 4 சொகுசு பங்களா, விலையுயர்ந்த வாகனங்களை வைத்துள்ளார் என்பதும், ராஜேஷும் நல்ல வசதியாக பல சொத்துக்களை வாங்கி குவித்து வைத்துள்ளார் என்றும் தெரியவந்துள்ளது.
3 பேரையும் கைது செய்த காவல்துறை
இதனை தொடர்ந்து, இணைய குற்றத்தடுப்பு பிரிவினரால் ராஜேஷ் சென்னையிலும், ரங்கராஜன் திருவண்ணாமலையிலும் கைது செய்யப்பட்டனர் என்று கூறப்படுகிறது. சுரேஷ்குமாரை போலீசார் பெங்களூரில் வைத்து கைது செய்துள்ள நிலையில், இவர்கள் மூவரின் வங்கி கணக்கிலும் கோடி கணக்கில் பணம் இருப்பு வைக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றவர்களும் இருக்க தான் செய்வார்கள் என்னும் பழமொழியினை நினைவுகூர வைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.