துணை ஜனாதிபதியை மிமிக்ரி செய்ததற்காக திரிணாமுல் எம்பி மீது போலீசில் புகார்
திரிணாமுல் காங்கிரஸ் (டிஎம்சி) எம்பி கல்யாண் பானர்ஜி நேற்று பாராளுமன்ற வளாகத்தில், துணை ஜனாதிபதி ஜப்கதீப் தங்கரை மிமிக்ரி செய்ததை தொடர்ந்து, அவர் மீது டெல்லி காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதற்கு எதிராக செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தின் படிக்கட்டுகளில் அமர்ந்து எதிர்க்கட்சிகள் நடத்திய போராட்டத்தின் போது, பானர்ஜி, துணை ஜனாதிபதி தன்கரை ஏளனமாக மிமிக்ரி செய்தார். தெற்கு தில்லியின் காவல் துணை ஆணையர் (டிசிபி) படி, நகரின் டிஃபென்ஸ் காலனி காவல் நிலையத்தில், அபிஷேக் கௌதம் என்ற வழக்கறிஞரால் இந்த புகார் அனுப்பப்பட்டுள்ளது. புகாரில், "இந்தியாவின் துணைக் குடியரசுத் தலைவரை, அவரது சாதி மற்றும் அவரது விவசாயி என்ற பின்னணியை அவதூறு செய்யும் நோக்கத்துடன் இந்த வீடியோ எடுக்கப்பட்டது" என்று கூறியுள்ளார்.
துணை ஜனாதிபதிக்கு ஆதரவாக எழுந்து நின்ற ஆளும் கட்சி MP-க்கள்
துணைத் தலைவர் ஜக்தீப் தன்கரை திரிணாமுல் எம்.பி., மிமிக்ரி செய்த சர்சையினை தொடர்ந்து, பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த ராஜ்யசபா எம்.பி.க்கள் இன்று துணை ஜனாதிபதிக்கு ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் ஒரு தனித்துவமான போராட்டத்தை நடத்தினர். துணைத் தலைவரும், மாநிலங்களவைத் தலைவருமான தன்கருக்கு தங்கள் ஆதரவைத் தெரிவிப்பதற்காக என்டிஏ உறுப்பினர்கள் சபையில் ஒரு மணி நேரம் எழுந்து நிற்பார்கள் என்று நாடாளுமன்ற விவகார அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறினார்.
நின்றபடியே கேள்வி பதில் அமர்வில் பங்கேற்ற எம்.பி.,க்கள்
"இதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். எல்லா வரம்புகளையும் மீறி இருக்கிறார்கள். அரசியல் சாசனப் பதவிகளில் மக்களைத் திரும்பத் திரும்ப அவமதிக்கிறார்கள். 20 ஆண்டுகளாக பிரதமரையும், ஓபிசி சமூகத்தையும் அவமதித்து வருகின்றனர்". "குடியரசுத் தலைவரை அவமதித்தார்கள். பழங்குடியினப் பெண், நீங்கள் ஒரு விவசாயியின் மகன், முதன்முறையாக ஜாட் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் துணைத் தலைவரானார்". "இந்தப் பதவியை அவமதித்துள்ளனர். துணை ஜனாதிபதி மற்றும் குடியரசுத் தலைவரின் அவமதிப்பை நாங்கள் பொறுத்துக் கொள்ள மாட்டோம் என்பதை தெளிவுபடுத்துகிறோம்" திரு ஜோஷி கூறினார். "எனவே, உங்கள் மரியாதைக்காகவும் மற்றும் அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவும், நாங்கள் நின்றுபடியே கேள்வி பதில் அமர்வில் பங்கேற்போம்," என்று அவர் மேலும் கூறினார்
வருத்தம் தெரிவித்த துணை ஜனாதிபதி
திரிணாமுல் காங்கிரஸ் எம்பி கல்யாண் பானர்ஜி மிமிக்ரி செய்தபோது, மற்ற எம்.பி.க்கள் சிரித்துக் கொண்டிருந்தனர். இந்தச் செயலை, ராகுல் காந்தி படம்பிடித்து சமூக வலைத்தளத்தினில் வெளியிட்டார். ராஜ்யசபாவில், இந்த வீடியோவை தான் பார்த்ததாகவும், அதனைப்பார்த்து "ஆழ்ந்த வேதனையில்" இருப்பதாகவும், பின்னர் தங்கர் கூறினார். காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரத்திடம் உரையாற்றிய அவர்,"உங்கள் கட்சியின் மூத்த தலைவரும், எம்.பி.யுமான ஒருவர் என்னை கேலி செய்யும் செயலை, தனிப்பட்ட தாக்குதலாக படம்பிடித்தபோது, நான் என்ன உணர்ந்தேன் என்று கற்பனை செய்து பாருங்கள்" என்றார். "இது ஒரு விவசாயி அல்லது சமூகத்தை மட்டும் அவமதிக்கவில்லை. இது ராஜ்யசபா தலைவர் பதவிக்கு அவமரியாதை. அதுவும் நாட்டை இவ்வளவு காலம் ஆண்ட ஒரு கட்சியால் செய்யப்படும் அவமரியாதை" என்று கூறினார்.
துணை ஜனாதிபதிக்கு ஆதரவாக பேசிய ஜனாதிபதி திரௌபதி முர்மு
"பாராளுமன்ற வளாகத்தில் நமது மதிப்பிற்குரிய குடியரசுத் துணைத் தலைவர் அவமானப்படுத்தப்பட்ட விதத்தைப் பார்த்து நான் அதிரிச்சியடைந்தேன். தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தங்களை வெளிப்படுத்தும் சுதந்திரத்துடன் இருக்க வேண்டும், ஆனால் அவர்களின் வெளிப்பாடு, கண்ணியம் மற்றும் மரியாதையின் விதிமுறைகளுக்குள் இருக்க வேண்டும்". "அதுதான் நாம் பெருமைப்படும் பாராளுமன்ற பாரம்பரியம். இந்திய மக்கள் அதை அவர்கள் நிலைநிறுத்துவார்கள் என்று எதிர்பார்க்கிறார்கள்" என்று குடியரசுத் தலைவர், திரௌபதி முர்மு தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். "அடிப்படை மரியாதைகள் எப்பொழுதும் நிலைத்திருக்க வேண்டும் என்ற அன்பான வார்த்தைகள் மற்றும் சரியான நேரத்தில் நினைவூட்டியதற்காக" ஜனாதிபதிக்கு தன்கர் நன்றி தெரிவித்தார்.