
"எனது வீட்டில் லண்டனிலிருந்து வந்த ஒட்டுக்கேட்பு கருவி!": பாமக ராமதாஸ் அதிர்ச்சி குற்றச்சாட்டு
செய்தி முன்னோட்டம்
பட்டாளி மக்கள் கட்சி (பாமக) நிறுவனர் ராமதாஸ், தனது வீட்டில் ரகசியமாக ஒட்டுக்கேட்பு கருவி வைத்திருந்ததாக ஒரு பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். "இந்த கருவி லண்டனில் இருந்து வரவழைக்கப்பட்டது" என்றும், "நான் உட்காரும் இடத்தில், நாற்காலியின் அருகே மறைத்து வைக்கப்பட்டிருந்தது" என்றும் தெரிவித்தார். இன்று தைலாபுரம் தோட்டத்தில் நிருபர்களை சந்தித்தபோது, அவர் கூறியது: "எனது வீட்டில் ஒட்டுக்கேட்பு கருவி இருந்தது. நான் உட்காரும் இடத்திலேயே அதைப் பதித்திருந்தார்கள். இது யார் வேலை, ஏன் வைக்கப்பட்டது என்பதை விசாரித்து வருகிறோம்." என்றார்.
வெளிநாட்டு சாதனம்
ஒட்டுக்கேட்பு கருவி வெளிநாட்டு சாதனம் எனவும் ராமதாஸ் குற்றசாட்டு
கண்டறியப்பட்டதாக கூறப்படும் ஒட்டுக்கேட்பு கருவி ஒரு முக்கிய வெளிநாட்டு சாதனமாகவும், அதிக விலையுடையதாகவும் இருப்பதாகவும், இது லண்டனிலிருந்து வந்திருக்கிறது எனவும் ராமதாஸ் கூறியுள்ளார். இச்சம்பவம் அரசியல் வட்டாரத்தில் அதிர்வலை ஏற்படுத்தியுள்ளது. ஒட்டுக்கேட்பு குற்றச்சாட்டுகள் வழக்கமாகவே பெரிய விவாதங்களை தூண்டும் நிலையில், ஒரு மூத்த அரசியல் தலைவரே நேரடியாக இது போன்ற குற்றச்சாட்டை முன்வைப்பது பெரிய முக்கியத்துவம் பெறுகிறது. கருவி யார் மூலமாக, என்ன நோக்கத்துடன், எப்போது பதிக்கப்பட்டது என்பது தொடர்பாக தற்போது விசாரணை நடைபெற்று வருவதாகவும் ராமதாஸ் தெரிவித்தார்.