இந்து கோவில்கள் பிரச்சனை: ஆஸ்திரேலிய பிரதமருடன் பிரதமர் மோடி பேச்சு
ஆஸ்திரேலிய இந்து கோவில்கள் சேதப்படுத்தப்பட்டது தொடர்பாக இந்திய சமூகத்தின் பாதுகாப்பு குறித்து ஆஸ்திரேலிய பிரதமர் உறுதியளித்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி இன்று(மார் 10) தெரிவித்தார். "கடந்த சில வாரங்களாக ஆஸ்திரேலிய ஆலயங்கள் மீதான தாக்குதல்கள் தொடர்பான செய்திகள் தொடர்ந்து வருவது வருத்தமளிக்கும் விஷயமாகும். இதுபோன்ற செய்திகள் இந்தியாவில் உள்ள அனைவரையும் கவலையடையச் செய்வதும், நம் மனதைக் கலங்கச் செய்வதும் இயல்பானதே." என்று செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மோடி கூறினார். "இந்த உணர்வுகளையும் கவலைகளையும் நான் பிரதமர் அல்பனீஸிடம் தெரிவித்தேன். இந்திய சமூகத்தின் பாதுகாப்பு தான் தன்னுடைய முன்னுரிமை என்று அவர் என்னிடம் உறுதியளித்தார். இருநாட்டு குழுக்களும் இதற்காக தொடர்பில் இருந்து ஒத்துழைப்பை வழங்கும்" என்று மேலும் அவர் தெரிவித்தார்
தொடர்ந்து சேதப்படுத்தப்படும் இந்து கோவில்கள்
கடந்த வாரம், பிரிஸ்பேனில் உள்ள ஸ்ரீ லட்சுமி நாராயண் கோவில் என்ற ஒரு முக்கிய இந்துக் கோவில் காலிஸ்தான் ஆதரவாளர்களால் தாக்கப்பட்டது. ஆஸ்திரேலியாவில் இரண்டு மாதங்களில் இந்துக் கோவில்களுக்கு எதிராக நடக்கும் நான்காவது சம்பவம் இதுவாகும். ஜனவரி 23 அன்று, மெல்போர்னின் ஆல்பர்ட் பூங்காவில் உள்ள ISCKON கோவிலின் சுவர்கள் "ஹிந்துஸ்தான் முர்தாபாத்" என்ற கிராஃபிட்டியால் சேதப்படுத்தப்பட்டன. ஹிந்துஸ்தான் முர்தாபாத் என்றால் 'இந்தியா ஒழிந்து போகட்டும்' என்ற அர்த்தமாகும். ஜனவரி 16ஆம் தேதி, விக்டோரியாவில் இருக்கும் கேரம் டவுன்ஸில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ சிவ விஷ்ணு கோயிலும் இதேபோல் சேதப்படுத்தப்பட்டது. ஆஸ்திரேலியாவில் உள்ள இந்துக் கோவில்களுக்கு எதிரான சம்பவங்களை இந்தியா பலமுறை கண்டித்ததுடன், ஆஸ்திரேலிய அரசாங்கத்திடம் இந்த பிரச்சினையை பற்றி பேசியுள்ளது.