புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மன்னர் மூன்றாம் சார்லஸ் விரைவில் குணமடைய பிரதமர் மோடி வாழ்த்து
புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸ் விரைவில் குணமடைய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். "மாண்புமிகு மன்னர் மூன்றாம் சார்லஸ் விரைவில் குணமடைந்து நல்ல ஆரோக்கியத்தை பெற இந்திய மக்களுடன் சேர்ந்து நானும் வாழ்த்துகிறேன்" என்று பிரதமர் மோடி ட்விட்டரில் கூறியுள்ளார். பக்கிங்ஹாம் அரண்மனை, திங்களன்று ஒரு அறிக்கையை வெளியிட்டது. அந்த அறிக்கையில், "புரோஸ்டேட் விரிவாக்கத்திற்கான அறுவை சிகிச்சைக்குப் பிறகு, மன்னர் சார்லஸுக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 75 வயதான மன்னர் சார்ல்ஸுக்கு கடந்த மாதம் லண்டன் கிளினிக்கில் விரிவாக்கப்பட்ட புரோஸ்டேட் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஜனவரி 17 ஆம் தேதி அவருக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது.
பொது மக்களை சந்திக்கும் பணிகளை ஒத்திவைக்க இருக்கும் மன்னர் சார்ல்ஸ்
அதற்கான மன்னர் சார்லஸ் சிகிச்சையைத் தொடங்கியுள்ளார். மேலும், பொது மக்கள் எதிர்கொள்ளும் பணிகளை ஒத்திவைக்க மருத்துவர்கள் அவருக்கு அறிவுறுத்தியதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. "அவர் தனது சிகிச்சையால் நலம் அடைந்துவிடலாம் என்று முற்றிலும் நேர்மறையான எண்ணத்துடன் இருக்கிறார், மேலும் விரைவில் முழு பொதுப் பணிக்குத் திரும்புவார்" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. "ஊகங்களைத் தடுப்பதற்காகவும், புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும்" இந்த செய்தியை மக்களுடன் பகிர்ந்து கொளவதாக பிரிட்டன் அரண்மனை தெரிவித்துள்ளது. மன்னர் சார்லஸ் சிகிச்சை பெறும் போது வழக்கம் போல் அரசு வணிகம் மற்றும் அதிகாரப்பூர்வ ஆவணங்களை பார்வையிட்டு தனது பணிகளை தொடர உள்ளார்.