மிகவும் பிரபலமான உலக தலைவர்களின் பட்டியலில் பிரதமர் மோடி முதலிடம்
அமெரிக்காவைச் சேர்ந்த ஆலோசனை நிறுவனமான 'மார்னிங் கன்சல்ட்' நடத்திய ஆய்வின்படி, பிரதமர் நரேந்திர மோடி 78 சதவீத ரேட்டிங் பெற்று உலகின் மிகவும் பிரபலமான தலைவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளார். அதன்படி, பிரதமர் மோடியின் ரேட்டிங், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் மற்றும் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் உள்ளிட்ட பிற தலைவர்களின் ரேட்டிங்கை விட அதிகமாக உள்ளது. இந்த கருத்துக்கணிப்பு மதிப்பீடுகளுக்காக 22 உலக தலைவர்களை அந்த நிறுவனம் ஆய்வு செய்திருக்கிறது. இதில் மெக்சிகோ அதிபர் ஆண்ட்ரெஸ் மானுவல் லோபஸ் ஒப்ராடோர் 68 சதவீத மதிப்பீட்டில் இரண்டாவது இடத்தையும், சுவிஸ் அதிபர் அலைன் பெர்செட் 62 சதவீத அங்கீகாரத்துடன் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளனர்.
கடைசி மூன்று இடங்களைப் பிடித்த தலைவர்கள்
இந்த "குளோபல் லீடர் அப்ரூவல்" கணக்கெடுப்பு ஜனவரி 26-31 வரை சேகரிக்கப்பட்ட தரவுகளை அடிப்படையாகக் கொண்டது என்று அந்த அரசியல் புலனாய்வு ஆராய்ச்சி நிறுவனம் கூறியுள்ளது. இந்த கணக்கெடுப்பு ஒவ்வொரு நாட்டிலும் உள்ள 18 வயதுக்கு மேற்பட்டவர்களின் ரேட்டிங்ஸின் படி தொகுக்கப்பட்டதாகும். அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு சார்பாக 40 சதவீதம் அமெரிக்கர்கள் மட்டுமே ரேட்டிங்ஸ் வழங்கியுள்ளனர். ஆனால், பிரதமர் நரேந்திர மோடி சார்பாக 78 சதவீத இந்தியர்கள் ரேட்டிங்ஸ் அளித்துள்ளனர். நார்வே பிரதமர் ஜோனாஸ் கர் ஸ்டோர், தென் கொரிய அதிபர் யூன் சொக்-யோல் மற்றும் ஜப்பானிய பிரதமர் ஃபுமியோ கிஷிடா ஆகியோர் பட்டியலில் கடைசி மூன்று இடங்களைப் பிடித்துள்ளனர்.