2 நாள் சுற்றுப் பயணமாக இன்று தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி
எதிர்வரும் மக்களவை தேர்தல் பணிகளை அனைத்து கட்சிகளும் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், ஆளும் பாஜக கட்சியினரும், பிரதமர் மோடியும், தங்கள் பங்கிற்கு நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அரசு திட்டங்களையும், பொதுக்கூட்டங்களையும் நடத்தி வருகின்றனர். அந்த வகையில், 2 நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி இன்று தமிழகம் வருகிறார். இன்று பல்லடம் மாதப்பூரில் நடக்கும் 'என் மண் என் மக்கள்' பாதயாத்திரை நிறைவு விழா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். இதற்காக பிரதமர் மோடி, திருவனந்தபுரத்தில் இருந்து விமானம் மூலம் இன்று மதியம் 2.05 மணியளவில் கோவை சூலூர் விமான படை தளத்திற்கு வருகிறார். பின்னர் அங்கிருந்து மாதப்பூருக்கு காரில் செல்கிறார். அதனை தொடர்ந்து, மாலை 5 மணிக்கு புறப்பட்டு மதுரை செல்கிறார்.
பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
பிரதமர் மோடியின் வருகையை ஒட்டி, கோவை- பல்லடம் சாலையிலும், மாதப்பூரிலும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பொதுக்கூட்டம் நடைபெறவுள்ள மாதப்பூர் பகுதியில் உள்ள மைதானம் முழுவதும் 6 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த பொதுக்கூட்ட மேடையில், பிரதமர் மோடியுடன், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன், ஜான் பாண்டியன் உள்ளிட்ட கட்சி தலைவர்கள் பலரும் கலந்துகொள்ளவுள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். முன்னதாக, நேற்று பல முக்கிய தலைவர்கள் பாஜகவில் இணையவிருப்பதாகவும், அதற்காக ஒரு விழாவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எனினும் அந்த நிகழ்ச்சி கடைசி நிமிடத்தில் பாதுகாப்பு காரணங்களுக்காக ரத்து செயப்படுகிறது என அறிவிக்கப்பட்டது. பிரதமர் கலந்துகொள்ளவுள்ள நிகழ்ச்சியில் இது பற்றி தெரிவிக்கப்படும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்